No menu items!

சீதையாக நடிக்க சாய் பல்லவிக்கு  எதிர்ப்பு கிளம்புகிறது.

சீதையாக நடிக்க சாய் பல்லவிக்கு  எதிர்ப்பு கிளம்புகிறது.

நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் ஒரு பக்கம் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. அதில் சாய் பல்லவியின் நடிப்பை பலரும்  பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் சாய் பல்லவிக்கு எதிராக வட இந்திய ஊடகங்களில் கடுமையான விவாதம் எழுது வருகிறது.

சாய் பல்லவி ஊட்டியில் வசிக்கும் மலைஇன மக்களான படுகா சமூகத்தைச்சேர்ந்தவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு  நடனத்தில் பெரிய ஈடுபாடு ஏற்பட்டு பள்ளி கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.  சாய் பல்லவி மருத்துவர் படிப்பை முடித்து ஜார்ஜியாவில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்.  தனியார் தொலைக்காட்சியில் நடந்த உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியிலும் தெலுங்கு சேனல் ஒன்றில் நடந்த நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றியாளராக மாறினார். அப்போதிருந்து நடிப்பின் மீது ஆர்வம் வந்து கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில் நடித்தார்.  பிறகு  மலையாளத்தில் வெளியான பிரேமம் 2015ல்  இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இவரை  நாயகியாக அறிமுகம் செய்தார்.  அந்தப்படத்தில் மலர் டீச்சர் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார்.   படமும், மலர் டீச்சர் பாத்திரமும் பெரிய வெற்றியை பெற்றது.  முதல்  படத்திலேயே சிறந்த அறிமுக நடிகை என்ற விருது கிடைத்தது.

பல திரைப்படங்களில் மலர் டீச்சர் என்ற பாத்திரமும் மலரே நின்னே காணாத .. என்ற பாடலும் ரெபரென்ஸ்களாக பயன்படுத்தப்பட்டன.  எல்லா திரைப்படங்களிலும் நடிக்க ஒத்துக்கொள்ளாமல் தேர்ந்தெடுத்து நடித்தார் சாய் பல்லவி. அதனால்தான் அவர் 16 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பேசப்படும் நடிகையாக வலம் வருகிறார்.

2022 ஆண்டு வெளியான கார்கி திரைப்படம் அவருக்கு இன்னொரு பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதே ஆண்டு தெலுங்கில் வெளியான விராட பருவம் திரைப்படத்தில் நக்சலைட்டாக நடித்தார். பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அந்தப்படத்தில் அவர் நடித்ததற்கு பாராட்டுக்கள் கிடைத்தன.  அந்த நேரத்தில் வெளியான ஒரு பேட்டியைத்தான் தற்போது வட இந்திய ஊடகங்கள் முன்னும் பின்னுமாக வெளியிட்டு  சாய் பல்லவிக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார்கள்.

2022-ல் கொடுத்த நேர்காணல் ஒன்றில் வன்முறை குறித்த தனது பார்வையை விளக்கிய சாய் பல்லவி,

எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது என்பதை வலியுறுத்தினார். இதற்கு உதாரணமாக, “பாகிஸ்தானில் உள்ள மக்கள் இந்திய ராணுவ வீரர்களைப் பயங்கரவாதிகளாகப் பார்ப்பார்கள். காரணம், அவர்களுடைய கண்ணோட்டத்தில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பற்றிய நம் பார்வையும் அப்படிதான் இருக்கும். கோணங்கள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், வன்முறையை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,  காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற படத்தை பார்த்தேன். அப்படத்தில் பண்டிதர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை காண்பித்தார்கள். அதேபோல் மாடு வைத்திருந்த ஒரு இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டு கொன்றார்கள். இந்த இரண்டு சம்பவத்துக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. நமது மதத்தின் மேல் இருக்கும் பற்றால் இன்னொருவரை காயப்படுத்தக்கூடாது. பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தவரை இந்திய ராணுவத்தினர் தீவிரவாதிகள்தான். நாம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கிறோம் என்பதைவிட அடிப்படையில் நல்ல மனிதராக இல்லாவிட்டால் பயனில்லை” என்று குறிப்பிட்டார். அது அப்போது பிரச்னையான சூழலில் சாய் பல்லவி வருத்தமும் தெரிவித்திருந்தார்.

அந்த பேட்டியத்தான் தற்போது இந்திய இராணுவ வீரர்களை தவறாக பேசியவர் என்று சித்தரிக்கிறார்கள். சாய் பல்லவியை பொருத்தவரை  சினிமாவில் இருந்தாலும் சினிமா உலகிற்கு உண்டான எந்த நடைமுறைக்கும் ஒத்துப் போக மாட்டார்.  பார்ட்டி கலாச்சாரம், விளம்பரங்களில் நடிப்பது உட்பட எதற்கும் அவர் சம்மதம் தெரிவித்ததில்லை. 

எந்த ஒரு தவறான பொருளுக்கும் நான் சிபாரிசு செய்ய மாட்டேன். நானே என் வீட்டில் அழகு சாதனங்களை பயன்படுத்தாத போது மக்களை எப்படி பயன்படுத்த சொல்வேன் என்று மிகப்பெரிய ஒரு விளம்பர நிறுவனம் அவரை அணுகியபோது நடிக்க மறுத்து விட்டார். 

இப்போது பல மொழிகளில் தயாராகும் இராமாயண கதையில் சீதையாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.  ராமராக ரன்பீர் கபூர் நடிக்கிறார்.  இந்த நேரத்தில் சாய் பல்லவில் சீதையாக நடிக்கக்கூடாது என்று ஒரு பக்கம் சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். 

இதற்கு சாய் பல்லவி பக்கமிருந்து இதுவரைக்கும் எந்த பதிலும் வரவில்லை. அப்படி வந்தால் அது பஞ்ச் பதிலாகவே இருக்கும் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...