மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழும் பம்பாயில் வசிக்கும் பாஸ்கர், வங்கி ஒன்றின் காசாளர். இளம் மனைவி சுமதி, மகன் கார்த்திக், சகோதரி, சகோதரன் மற்றும் அப்பாவுடன் வசிக்கும் அவருக்குக் கடன் மேல் கடன். நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கும் அவர், தனக்கு புரமோஷன் கிடைக்கும் என நம்புகிறார். அது கிடைக்காமல் போக, நேர்மையை ஓரமாக வைத்துவிட்டு, வேறு முடிவை எடுக்கிறார். அது அவருக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது. வசதியான வாழ்க்கையில் நுழையும் பாஸ்கர் அடுத்தடுக்கு சந்திக்கும் பிரச்சனைகள் படத்தை வேகப்படுத்துகிறது. அதில் இருந்து மீண்டு சாதாரண பாஸ்கர், லக்கி பாஸ்கர் ஆனாரா என்பது படம்.
மும்பையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பங்கு சந்தை மோசடிகளை சில கும்பல் வங்கிகள் துணையுடன் எப்படி நடத்தினார்கள். என்பதை துல்லியமாக சிக்கல் இல்லாமல் சொல்லியிருக்கிறது படம். படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு பாராட்டுகள். துல்கரின் குரல் வழியே கதை விரிகிறது.
வங்கி ரசீது மூலம் நடக்கும் ஊழல்கள், வங்கிகளின் பெருந்தலைகள் நடத்தும் பண நாடகம், பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தின் பின்ன ணியில் கைமாறும் பகீர் மோசடிகள் என கொஞ்சம் சிக்கலான கதைதான் என்றாலும் அதைத் தெளிவாகச் சொன்ன விதத்தில் வெற்றி பெறுகிறது வெங்கி அட்லூரியின் டீம்.
துல்கரின் பொளாதார சிக்கலை சில காட்சிகளில் ரிப்பிடேஷன் மட்டும் தொய்வை கொடுக்கிறது. மற்றபடி துல்கரின் தகிடுதத்த வேலைகளை படத்தின் கடைசிவரை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். துல்கரின் நடிப்பில் நல்ல தேர்ச்சி. மீனாட்சி சௌத்ரியும் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். வங்கியை ஏமாற்றும் ஒருவரின் செயலை ரசித்து கைதட்டும் தவறான நிலைக்கு பார்வையாளர்களைக் கொண்டுவந்திருப்பது இயக்குனர் வெங்கி அட்லூரியின் திரைக்கதை.
ராம்கி, சச்சின் கெடேகர், சாய்குமார், டினு ஆனந்த் என துணை கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றனர். ராம்கியின் கேரக்டரை கம்பீரமாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் வெங்கி.
1990களில் நடக்கும் கதைக்கு ஏற்ற அரங்க வடிவமைப்பும், ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மும்பையின் பங்கு சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் நிழல் உலக தாதாக்கள் சுவாரஸ்யப்படுத்துகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை சிறப்பு. நவீன் நூலியின் படத்தொகுப்பு அருமை என்றாலும் முதல் பாதியில் இன்னும் தாராளமாகக் குறைத்திருக்கலாம்