அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்திய நேரப்படி இன்று மாலை முதல் நாளை காலை வரை நடக்கிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சித் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிகிறது. இதை முன்னிட்டு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தானே போட்டியிடுவதாக ஜோ பைடன் அறிவித்திருந்தார். குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் களம் இறங்கினார். வயோதிகம் காரணமாக போட்டியில் இருந்து விலகிய ஜனாதிபதி ஜோ பைடன். தனது கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று அறிவித்தார். அதன்படி அவரும் களத்தில் குதித்தார். இப்போது இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முன்கூட்டியே வாக்குப்பதிவு
அமெரிக்க அதிபர் பதவிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றாலும், அமெரிக்காவின் முன்கூட்டியே வாக்களிக்கும் முறைபடி (Early voting) ஏற்கெனவே 8.1 கோடிக்கு மேற்பட்டோர் தங்கள் வாக்குகளை அளித்துள்ளதாக புளோரிடா பல்கலைக்கழக தேர்தல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இதில், 44,402,375 பேர் (4.4 கோடி பேர்) நேரில் வாக்களித்துள்ளனர். 36,977,311 தபால் வாக்குகள் திருப்பி அனுப்பப்பட்டன. கடந்த அதிபர் தேர்தலில் (2020), கொரோனா பெருந்தொற்று பலரை நெரிசலான வாக்குச் சாவடிகளிலிருந்து விலக்கி வைத்தபோது, இந்த ஆண்டின் முன்கூட்டியே பதிவான வாக்குகள் என்பது 2020-இல் பதிவான 10.15 கோடி வாக்குகளை விட மிகவும் குறைவு. இருப்பினும், 2016 (4.72 கோடி) அல்லது 2012ஆம் ஆண்டில் (4.62 கோடி) முன்கூட்டியே பதிவான வாக்குகளை (Early voting) விட அதிகமாகும்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். அதன்படி, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?
இந்த தேர்தலில் தொடக்கம் முதல் கமலா ஹாரிஸிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. கருத்துக்கணிப்பு முடிவுகளும் சாதகமாக இருந்தன. ஆனால் தேர்தல் நெருங்கும் வேளையில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு அதிகரிக்க தொடங்கியது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின் படி, இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. 2020 அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் பென்சில்வேனியா மாகாணத்தின் முடிவுகளில் சலசலப்பு நீடித்து வந்தது. இதனால் உடனடியாக தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர் நவம்பர் 7ஆம் தேதி காலை அறிவிக்கப்பட்டது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
கமலா ஹாரிசுக்காக சிறப்பு பூஜை
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், இந்திய வம்சா வழியை சேர்ந்தவர் என்பதால், அவர் வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம் இந்தியர்கள் பலருக்கும் உள்ளது. கமலா ஹாரிஸின் வெற்றிக்காக, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் இன்று அதிகாலை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
கமலா ஹாரிஸ் இத்தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெறுவார்.