நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியிருக்கிறது இந்திய அணி. இதன்மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூரில் நடந்த டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது இந்திய அணி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆனதற்கான காரணங்களை பார்ப்போம்.
டாப் ஆர்டரின் சொதப்பல் பேட்டிங்:
கடந்த சில ஆண்டுகளாகவே ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்களின் பேட்டிங்கையே இந்திய அணி பெரிதும் நம்பி இருந்தது. ஆனால் இந்த தொடரில் அவர்கள் இருவரும் இந்தியாவை மொத்தமாக கைகழுவி விட்டனர். இந்த தொடரில் 3 போட்டிகளில் ஆடிய விராட் கோலி, தனது 6 இன்னிங்ஸ்களில் எடுத்த மொத்த ரன்கள் 93. அதேபோல் நியூஸிலாந்து தொடரில் ஆடிய 6 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா எடுத்த மொத்த ரன்கள் 91. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வாலும் 100 ரன்களை எட்டவில்லை. ரிஷப் பந்த்தை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை. இது இந்திய அணியின் பேட்டிங்கை கடுமையாக பாதித்தது.
துவண்டு போன அஸ்வினின் கை:
பொதுவாகவே உள்ளூரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் எதிரணி வீரர்களின் விக்கெட்களை மொத்தமாக அள்ளுவது அஸ்வினுக்கு கைவந்த கலை. அவரது பந்துவீச்சே உள்ளூர் போட்டிகளில் இந்தியாவுக்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளன. ஆனால் இந்த தொடரில் அஸ்வினும் பெரிய அளவில் சொதப்பினார். நியூஸிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலுமாக சேர்த்து அவர் எடுத்த மொத்த விக்கெட்கள் 9. அவரது பந்துவீச்சு சராசரி 41.22-ஆக இருந்தது. அஸ்வினின் கரங்கள் விக்கெட்களை எடுக்காமல் துவண்டு போனது இந்தியாவை கடுமையாக பாதித்தது.
சொதப்பிய அணித் தேர்வு:
தேர்வுக் குழு மற்றும் டீம் மேனேஜ்மெண்டின் அணித் தேர்வு சொதப்பல்களும் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெங்களூரு மைதானத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அந்த மைதானத்தில் அவரால் விக்கெட்களை எடுக்க முடியவில்லை. அதனால் அடுத்த போட்டியில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் அவர் சேர்க்கப்படவில்லை. இது இந்திய அணியை கடுமையாக பாதித்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது முன்னாள் வீர்ர்கள் பலரின் கருத்தாக உள்ளது.
டி20 போட்டிகளின் தாக்கம்:
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய அனைத்து வீரர்களும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடி வருபவர்கள். முன்காலங்களில் டி20 போட்டிகளைவிட ரஞ்சி கோப்பை போட்டிகள் போன்ற நீண்டகால போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்பட்டனர். குறிப்பாக சேதேஸ்வர் புஜாரா, ரஹானே, ஹனுமா விகாரி போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கென்றே அணியில் இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் அணியில் இல்லை. இருக்கும் வீர்ர்கள் அனைவரும் டி20 போட்டியின் தாக்கத்தில் இருந்து விடுபடாமல் இருந்ததால் அவர்களால் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆட முடியவில்லை. இது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.
சுழற்பந்துக்கு பயப்படும் பேட்ஸ்மேன்கள்:
முன்காலத்தில் இந்தியாவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்த்தனர். அதனால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடி பழக்கம் இருந்தது. உள்ளூர் போட்டிகளில் ஆடுகளங்களை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றி வெற்றிகளை குவித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களை விட பும்ரா, ஷமி போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அதனால் பேட்ஸ்மேன்களுக்கும் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் அனுபவம் இல்லாமல் போயுள்ளது.