சென்னையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன். ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவருடைய அம்மா கீதாவுக்கு அதில் விருப்பமில்லை. ஆனால் முகுந்துக்கு துணை நிற்கிறார், காதலி இந்து ரெபெக்கா ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் செல்லும் முகுந்த், கேப்டன், மேஜர் போன்ற உயர் பதவிகளை அடைகிறார். முகுந்துடனான காதலை இந்துவின் பெற்றோர் எதிர்க்க, அதைச் சமாளித்து அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் 44 படைக்குத் தலைவராக நியமிக்கப்படும் முகுந்த், தெற்கு காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் வீரமரணம் அடைவதுதான் படம்.
இராணுவ வீரர்களின் கதைகளில் முதல் முறையாக அனைத்து அம்சங்களும் சரியாக அமைந்து இருக்கும் படமாக அமரன் வந்திருக்கிறது. அன்பு, காதல் பாச உணர்வுகளை நம்முள் கடத்தி விட்டதுதான் படத்தின் முதல் வெற்றி. அதன் பிறகுதான் நடிப்பு, காட்சியமைப்பு எல்லாமே கைக்கொடுக்கும். இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அருமையாக கதை சொல்லியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் அர்ப்பணிப்பும், மெனக்கெடலும் கதாபாத்திரத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சாய் பல்லவியுடனான காதல், அம்மா கீதா கைலாசத்துடனான பாசம் இராணுவ பயிற்சிகள் என்று எல்லா இடங்களிலும் மிகையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சாய் பல்லவி எல்லா படங்களிலும் தன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் விதம் தனித்துவமாகவே இருந்து வருகிறது. இதிலும் கவனிக்க வைத்திருக்கிறார். கீதா கைலாசம் இயல்பான நடிப்பில் நம் கண்களை குளமாக்குகிறார்.
முகுந்த் பாத்திரம் முதன் முதலில் இராணுவத்திற்கு போகும் இடம் நெகிழ்ச்சி. சண்டைக்காட்சிகள் ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொடுத்தாலும் ரசிக்க வைக்கிறது. இராணுவத்தினரின் ஒழுக்கம், நேர்மை, பணி எல்லாவற்றையும் இந்த தலைமுறையினர் தெரிந்து கொள்ள வைத்திருப்பது நல்ல விஷயம்.
திரைப்படமாக சொல்ல பாடல் தேவைப்பட்டிருக்கிறது. அதில் மின்னல் பாடல் மட்டும் சிறப்பு. சாய் ஒளிப்பதிவு காஷ்மீரை கம்பீரமாக காட்டியிருக்கிறது. சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் அமரன் நீங்கா இடம் பிடித்து விட்டது. இளைய தலைமுறையினருக்கு முகுந்த் வரதராஜனின் தியாகத்தை வீர மரணத்தையும் பதிவு செய்திருப்பது ராஜ்குமார் பெரியசாமிக்கு கிடைத்த வெற்றி.