தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையின் போது ரூ.438 கோடியே 53 லட்சத்துக்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.29 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த மது விற்பனை
தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த எல்லா கடைகளையும் சேர்த்து தினந்தோறும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடப்பது வழக்கம். வார இறுதி நாட்களின் அது ரூ.200 கோடியாக அதிகரிக்கும். இதுவே பண்டிகை நாட்களை ஒட்டி ஒரு நாள் விற்பனை ரூ.250 கோடியாக உயரும். கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 12-ந்தேதி தீபாவளி பண்டிகை வந்தது. அன்றைய தினமும், முந்தைய நாளும் சேர்த்து ரூ.467 கோடியே 63 லட்சத்துக்கு மது விற்பனையானதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு இதைவிட அதிகம் விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ந்தேதி ரூ.202 கோடியே 59 லட்சத்துக்கும், தீபாவளி நாளான 31-ந்தேதி ரூ.235 கோடியே 94 லட்சத்துக்கும் என 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.438 கோடியே 53 லட்சத்துக்குதான் மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.29 கோடியே 10 லட்சம் அளவுக்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மண்டல வாரியாக மதுவிற்பனை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.. இதன்படி சென்னை மண்டலத்தில் கடந்த 30ம் தேதி அன்று 47.16 கோடிக்கும், 31ம் தேதி 54.18 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாம்.
மதுரை மண்டலத்தில் 30ம் தேதி 40.88 கோடிக்கும், 31ம் தேதி 47.73 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் 30ம் தேதி 39.81 கோடிக்கும், 31ம் தேதி 46.51 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சேலம் மண்டலத்தில் 30ம் தேதி 38.34 கோடிக்கும் 31ம் தேதி 45.18 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 30ம் தேதி அன்று 36.40 கோடிக்கும், 31ம் தேதி 42.34 கோடிக்கும் மதுவிற்பனை நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதான் காரணமா?
கடந்த ஆண்டு தீபாவளியை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மதுவிற்பனை வெகுவாக சரிந்துள்ளதுக்கு, தீபாவளி பண்டிகை மாத இறுதியில் வந்தது ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததை ஒப்பிடும் போது, 1,500 குறைந்ததும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களுடன் கூடிய பார்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், அங்கு விற்பனை அதிகரித்துள்ளதால், டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.