‘உலக காட்டுயிர் நிதியம்’ சமீபத்தில் ‘தி லிவிங் பிளானட் 2024’ (The Living Planet 2024) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை குறிப்பிட்டுள்ளது.
சென்னையின் வெள்ளமும் வறட்சியும்
உலகளாவிய அமைப்புகள், காலநிலை மாற்றம், சூழலியல் பிரச்னைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கும் அறிக்கைகளை அவ்வப்போது வெளியிடும். அந்தவகையில்தான், ‘உலக காட்டுயிர் நிதியம்’ சமீபத்தில் ‘தி லிவிங் பிளானட் 2024’ (The Living Planet 2024) அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில், அமேசான் காடுகளை இழப்பால் உலக வானிலை எப்படி பாதிக்கப்படுகிறது? கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, ஐரோப்பா, வட அமெரிக்காவில் வானிலையின் போக்கு எப்படி மாறுகிறது? இதனுடன், உலகளவில் நேரிட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்தும் இந்த அறிக்கை விரிவாகப் பேசுகிறது. இதில்தான், வேகமெடுக்கும் நகரமயமாதல் காரணமாக சென்னை, தன் சதுப்புநிலப் பரப்பில் 85% பகுதியை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் சதுப்புநிலங்கள் குறைந்துள்ளதால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்தும் இந்த அறிக்கை பேசுகிறது.
“சென்னையில் சதுப்பு நிலங்கள் அழிந்ததன் காரணமாக, நிலத்தடி நீர் போன்ற இயற்கை செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவதற்கு இதுவும் முக்கிய காரணமாக உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கோடையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர்நிலைகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் மழை அளவு அதிகமாக இருந்தது என்றாலும், இதுபோல் முன்பும் சென்னையில் மழை பெய்துள்ளது. ஆனால், அப்போது வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இருந்து சென்னையை காப்பாற்றிய சதுப்பு நிலங்களின் அழிவால் 2015இல் நிலைமை மோசமானது.
வெள்ளம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் நிலத்தடி நீரை மீள்நிரப்பு செய்யவும், தண்ணீரைத் தக்க வைக்கவும் சதுப்பு நிலங்கள் இல்லாத காரணத்தால், சென்னையின் ஒரு கோடியே 12 லட்சம் மக்கள், தண்ணீர்ப் பற்றாக்குறையால் குடிக்க, குளிக்க, சமைக்க என தங்கள் நீர்த்தேவையை லாரிகள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்” என்கிறது அந்த அறிக்கை.
சதுப்பு நிலங்கள் ஏன் முக்கியம்?
சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தையும் அவை மேற்கொள்ளும் இயற்கை செயல்பாடுகள் குறித்தும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதில், “நீரை மாசுபடுத்தும் அம்சங்கள், வண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் இயற்கை வடிகட்டியாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. ஆறுகள், ஏரிகள், சிற்றோடைகள் போன்றவற்றின் நீரை வறட்சிக் காலங்களில் பயன்படுத்தும் வகையில், ஒரு பஞ்சு போல உறிஞ்சி சேமித்து வைக்கும் ஒரு சூழலியல் அமைப்பாகவும் திகழ்கிறது. வலசை வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் தளமாகவும் சதுப்பு நிலங்கள் திகழ்கின்றன. தாவரங்கள், விலங்குகளுக்கான இயற்கை வாழ்விடமாகவும் செயல்படுகின்றன.
சென்னையில் பள்ளிக்கரணை, பழவேற்காடு, எண்ணூர் ஆகியவை முக்கியமான சதுப்புநிலப் பகுதிகள். இதில் பெரும்பகுதி சென்னை பெருநகரை விரிவுபடுத்தும் நோக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இயற்கையாக அமைந்த, கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்புநிலப் பகுதிகளில் ஒன்று. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் உண்மையான மொத்த பரப்பளவில், தற்போது 10% மட்டுமே எஞ்சியுள்ளது. இதன் கிழக்கு சுற்று எல்லை, பக்கிங்ஹாம் கால்வாய், பழைய மகாபலிபுரம் சாலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக உள்ளது. தெற்கு, மேற்கு எல்லைகள் குடியிருப்புகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களால் நிறைந்துள்ளன.
சுமார் 250 சதுர கி.மீ. அளவுக்கு பள்ளிக்கரணை சதுப்புநிலம் பரவியுள்ளது. அந்த சதுப்புநிலம், கண்ணாடி விரியன் எனப்படும் பாம்பு ( Russel’s Viper) மற்றும் அரிவாள் மூக்கன் (Glossy lbis), நீளவால் தாழைக்கோழி (Pheasant-tailed Jacana) உள்ளிட்ட பறவைகள் போன்ற அழிந்துவரும் உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது.
அரசு பதில் என்ன?
இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு, “மீதமுள்ள சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கப் பல்வேறு துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.