தீபாவளிக்கு வெளியான படங்களில் அதிக ரசிகர்களை கவர்ந்த படமாக அமரன் இருக்கிறது. இந்த படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் வெளியான சில விமர்சனங்கள்
சி.எம்.மகாதேவன்
தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்தான் அமரன்.
அவர் வாழ்வின் முக்கிய அங்கமான இரண்டு விஷயங்களை மட்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். ஒன்று ராணுவத்தில் பணிபுரிவது. இரண்டாவது அவரது காதல் வாழ்க்கை. இந்த இரண்டையும் முழுமையாக காட்சிப்படுத்தியிருக்கிறது அமரன்.
படத்திலும் ராணுவம் மற்றும் சாய் பல்லவி காட்சிகள் தான் மாறி மாறி வருகிறது. ஆனால் அவை அனைத்துமே க்ளைமேக்ஸோடு சம்பந்தபட்டவை என்பதால் அவசியமான காட்சிகள் தான். ராணுவத்தில் முகுந்த் பணிபுரிந்த போது அவர் முன்னின்ற ஆபரேஷன்களை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ராஜேஷ்குமார்:
ஒவ்வொரு மாமாங்கமும் ஒரு ராணுவம்/தேசபக்தி படம் வரும். இந்த மாமாங்கத்துக்கு இது. இது டாகுமெண்டரியா அல்லது திரைப்படமா என்று குழப்பத்திலேயே முதல் பாதியின் பெரும்பகுதி நகர்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதிகள், கல்லெறிபவர்கள், ராணுவம் மீது தாக்குதல் என்று தேச பக்தர்கள் ரத்தம் கொதிக்க தேவையான காட்சிகள் போதுமான அளவு உண்டு.
இது பான் இண்டியா படமென்றால் வடக்கில் நன்றாக போகும். புல்வாமா தாக்குதல், முகுந்த் மரணம் போன்றவையெல்லாம் ஆடியன்ஸை கண்ணீர் விட வைக்க வேண்டிய தருணங்கள். ஆனால் திரைக்கதையின் போதாமை காரணமாக புல்லரிக்க வேண்டிய தருணங்களில் அரிக்கவில்லை. நல்ல வேளையாக சாய் பல்லவி தனது அருமையான நடிப்பால் அந்த வெற்றிடத்தை நிரப்புகிறார். மற்றபடி படம் அங்கங்கே சுவாரசியமாக இருக்கிறது. மற்ற பல இடங்களில் விழிப்பாக இல்லாவிட்டால் தூங்கிவிட வாய்ப்பதிகம். எனவே ஆல் த பெஸ்ட்
சரவண கார்த்திகேயன்:
படத்தின் மிகப் பெரிய பலம் சாய்பல்லவியின் நடிப்பு. மேஜர் முகுந்த் போர்க்களத்தில் பெற்ற அத்தனை வெற்றிகளை விடவும் இத்தகு உணர்ச்சிகரமான காதலியைப் பெற்றதுதான் பெரிய வெற்றி என நமக்குத் தோன்றுகிறது. அவ்வளவு உயிர்ப்பான உற்சாகமான முகபாவம் மற்றும் உடல்மொழி. காதலை அப்படி அழகாக வெளிப்படுத்துகிறார். தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
அவருக்கு அடுத்தபடி எனக்குப் பிடித்தது ராகுல் போஸின் நடிப்பு. முகுந்த், இந்து இருவரின் குடும்பமும் நல்ல நடிப்பு. சிவகார்த்திகேயனும் பாஸாகிறார். பின்னணி இசை (ஜிவி பிரகாஷ் குமார்) நன்று. ஒளிப்பதிவும் சிறப்பு. படத்தில் வரும் இரண்டு ராணுவ ஆபரேஷன்களும் நன்றாக execute செய்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு மரியாதையும் வாழ்த்துக்களும்!
முகுந்தன்:
இவன் சுட்டுடே இருக்கேன் … அவ அழுதுட்டே இருக்கா..
இப்படியாக போனது 2nd half.
தேஜஸ் சுப்பு:
அமரன் படம் சிவகார்த்திகேயனின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக விறுவிறுப்பாக, கொஞ்சம் எமோஷனலாக படம் அருமையாக இருக்கிறது. இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி அவ்வளவு அருமையான நடிப்பு. யார் முன்னும் அழக்கூடாது என்று சொன்ன கணவனின் வார்த்தை நினைவுக்கு வந்ததும் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு அமர்வதும், அதை மீறி அவர் கண்ணில் கண்ணீர் வழிவதும் செம.
சி.கா. செம அர்ப்பணிப்பு. செம ஹேண்ட்ஸம். செம மேன்லி லுக். படத்தின் இடைவேளைக்கு முந்தைய சண்டைக் காட்சி கொஞ்சமே கொஞ்சம் நீளமாக இருக்கிறது. கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு தீவிரவாதியுடன் அடிதடி சண்டை ஹீரோவுக்காக வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. சாய் பல்லவியுடனான காதல் காட்சிகள் அவ்வளவு அழகும், இயல்புமாய் இருக்கின்றன. டூயட் வைத்து நம்மைக் கொல்லாமல் யதார்த்தமாக இருக்கிறது காதல். படத்தைக் கட்டாயம் பார்க்கலாம்.
ஏ.ஜான்:
கண்ணீர் ஆங்காங்கே கரைந்துகொண்டே இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு வெற்றிப்படம். மேஜர் முகுந்தின்வாழ்க்கை இவ்வளவு அழகானதும், தைரியமானதுமா, காதல் கனிந்ததுமா என திரையில் விரியச் செய்த ராஜ் குமார் பெரியசாமிக்கு பெருமையெல்லாம் போய்ச்சேரட்டும்.