விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடுதான் சோசியல் மீடியாவில் இப்போது ஹாட் டாபிக். மாநாட்டில் குவிந்த தவெக தொண்டர்கள், விஜய் பேச்சு கருத்துகள் குறித்து மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்களிடம் இருந்து எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் விமர்சனம் இங்கே…
“1) முதலில் தமிழகத்தின் அரசியல் மேடைப் பேச்சு விதிகளை உடைத்து unconventional முறையில் நாடகீயமாகவும் இயல்பாகவும் பேசிய விஜய் தன் கன்னியுரையில் ஜெயிக்கிறார். ஸாரி ப்ரோ, அல்லு சில்லு வேலை, பயோஸ்கோப் காட்றது என்றெல்லாம் பேசுகிறார். இப்பாணிப் பேச்சு 25 வயதுக்குக் கீழ் உள்ள அரசியல்மயப்படாத இளைஞர்களை எளிதில் ஈர்க்கும் என ஊகிக்கிறேன்.
2) கட்சிப் பெயர் அல்லது ஆட்களை நேரடியாகக் குறிப்பிடவில்லையே தவிர பாஜக தன் கொள்கை எதிரி, திமுக தன் அரசியல் எதிரி எனத் தெளிவாகவே பிரகடனப்படுத்தி விட்டார். கமலின் முதல் மாநாட்டை விட விஜய் மேலேறி நிற்பது இங்கேதான். முக்கிய ப்ளஸ் இது.
3) அதிலும் திமுகவை ஒரு படி அதிகமாகவே இறங்கி அடித்து விட்டார். ஊழல் செய்யும் கரப்ஷன் கபடதாரிகள்; பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி தமிழகத்தைச் சுரண்டிக் கொள்ளையடிக்கும் குடும்பச் சுயநலக் கூட்டம்; திராவிட மாடல் எனச் சொல்லி ஏமாற்றி அரசியல் செய்பவர்கள், சிறுபான்மை Vs பெரும்பான்மை என பயமுறுத்தி சீன் போட்டு ஓட்டு வாங்குபவர்கள்; பி டீம், காவிச் சாயம் எனப் பொய்ப் பிரச்சாரம் செய்பவர்கள் என்று அவர்களை நேரடியாகவே தாக்குகிறார்.
4) எல்லாவற்றுக்கும் மேல், “அவுங்க ஃபாஸிசம்னா நீங்க என்ன பாயாசமா?” எனக் கேட்கிறார் – தமிழக அரசியல் களத்தில் நெடுங்காலத்துக்கு இந்த வசனம் திமுகவுக்கு எதிராகப் புழக்கத்தில் இருக்கப் போகிறது. பாஜக பற்றி பிளவுவாதிகள், சமத்துவத்தை மறுப்பவர்கள் என்று சொன்னார். அனிதா மரணத்தை முன்னிட்டு நீட் தேர்வை விமர்சித்தார். அதைத் தாண்டி பெரிதாகப் பேசவில்லை. கட்சிப் பெயரே தமிழக வெற்றிக் கழகம் எனும் போது தமிழக அரசியல்தான் குறி என்றாகி விட்ட பின் திமுக எதிர்ப்புதான் சரி. போலவே அதிமுக பற்றியும் ஏதும் இல்லை. அவர்களை யாருமே பொருட்படுத்துவதில்லை.
5) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதையே அடிநாதமாகச் சொல்லி மதச் சார்பற்ற சமூக நீதியே தன் கொள்கை என்கிறார். அதனுள்ளே ஜனநாயகம், சமூக நீதி, சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், பகுத்தறிவுச் சிந்தனை, மாநிலத் தன்னாட்சி, இருமொழிக் கொள்கை, இயற்கை வளப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை உத்தேசித்த வளர்ச்சி, உற்பத்தித் திறன், போதை ஒழிப்பு ஆகிவற்றை அதன் உட்கொள்கைகளாகக் கட்டமைக்கிறார். அவசியமான பெரும்பாலான விஷயங்களை உள்ளடக்கிய நல்ல பட்டியல்தான்.
6) எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதே இலக்கு என்கிறார் – அதாவது அனைவருக்கும் வாழ வீடு, உண்ணச் சோறு, சம்பாதிக்க வேலையை உறுதி செய்வது. மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுப்போம், முடியாதோருக்கு மீன் பிடித்துக் கொடுப்போம் என்கிறார். என் புரிதலில் மக்களுக்கு இலவசங்களைத் தொடரும் தொனி அதில் இருக்கிறது – எனவே சர்க்காரில் சொன்ன இலவச எதிர்ப்பு என்பது இயக்குநரின் குரல் எனப் புரிந்து கொள்ளலாம். சாதிவாரிக் கணக்கெடுப்பே இட ஒதுக்கீட்டைச் சீர் செய்யும் என்றும் நினைக்கிறார்.
7) பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை வழிகாட்டிகள் என்கிறார். இதில் பெண்கள் இருவரையும் பெண்களைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டுமே என வலிந்து திணித்த மாதிரி இருக்கிறது. பெண்களுக்குத் தன் கட்சியில் முக்கியத்துவம் இருக்கும் என்கிறார் – வழிகாட்டிகளிலும் அதை அடையாளப்படுத்த எண்ணியிருக்கலாம். அவருக்கு விழப் போகும் பெரும்பாலான வாக்குகள் பெண்களுடையது என்பதையும் மதித்தாக வேண்டும்தான்.
😎 கடவுள் மறுப்பு தவிர பெரியாரை ஏற்கிறேன் என்கிறார். அது ஓர் அசட்டு வாதம் என்றாலும் அண்ணாவே வைத்த வாதம் என்பதால் புன்னகையுடன் கடக்கலாம். அண்ணா ஏற்ற ஒற்றைத் தேவனைக் கலைஞர் ஏற்கவில்லை என்பதைக் கவனிக்கலாம். அரசியல் சாசனத்தோடு கீதையும் குரானும் பைபிளும் மேடையில் விஜய்க்கு வழங்கப்பட்டன. அவர் Practising Christian எனும் போது கடவுள் மறுப்பு பேசினால் அபத்தமாகவும் இருக்கும்தான்.
9) திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் தான் பிரித்துப் பார்க்கவில்லை, இரண்டும் இம்மண்ணின் இரு கண்கள் என்கிறார். அடையாள அரசியலுக்குள் சிக்காமல் நாசூக்காகத் தப்பிக்கும் உத்திதான். தவிர, இது நாம் தமிழருக்கான மறைமுக அழைப்பும்தான்.
10) அவரே சொன்னது போல் மாநாட்டின் வெடிகுண்டு ஆட்சியதிகாரத்தில் பங்கு என்ற அறிவிப்பு. விசிக, கம்யூனிஸ்ட்கள், தேமுதிக எல்லோருக்குமான தூண்டில் என்றே இதைப் பார்க்க வேண்டும். உண்மையிலேயே 2026 தேர்தல் கூட்டணியில் மாற்றம் உண்டாக்கப் போகும் மாஸ்டர் ஸ்ட்ரோக் அரசியல் உத்தி இது.
11) கூத்தாடி எனக் கேலி செய்யப்படுவதை ஒட்டி கூத்து எப்படி மக்கள் மனதுக்கு நெருக்கமான வடிவம் என எம்ஜிஆர், என்டிஆரை முன்வைத்துப் பேசினார். அது ஒரு நல்ல நிகழ்த்துகலையாகவே எனக்குப் பட்டது. ஆனால், போலித்தனமற்ற ஆவேசம். தன் ஆரம்ப காலத் தோற்றம் தொடர்பான விமர்சனங்களையும் குறிப்பிட்டார்.
12) தான் உச்சத்தில் இருப்பதை, அந்தப் பெரிய ஊதியத்தைத் தூக்கிப் போட்டு விட்டு வந்திருக்கிறேன் என்பதைச் சொல்லி அது மக்களை நம்பியே என்பதை அடிக்கோடிட்டார். ஒரு முடிவோடு வந்திருக்கிறேன், no looking back என்றார் மற்றொரு இடத்தில். அது நான் முன்பே பல முறை குறிப்பிட்டது போல் உண்மையாகவே அரிய செயல். சொல்லிக் கொள்ளத்தக்க பெருமைக்குரிய விஷயம்.
13) உரை தொடங்குகையில் குழந்தைக்குத் தாய்ப் பாசமும் தெரியாது பாம்பு பற்றிய பயமும் இராது. அதே போல்தான் புதியவனான தான் அரசியலில் இறங்கி இருப்பதாகச் சொன்னார். உரையின் பிற்பகுதியில் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று சொல்வது போல் நடந்து கொள்ளக் கூடாது எனத் தம் கட்சிக்காரர்களுக்கு அறிவுறுத்தினார் – ரசிகர்கள் என்பதிலிருந்து தொண்டர்களாக மாறும் முதிர்ச்சியை வலியுறுத்தும் நோக்கில். இன்னொரு இடத்தில் நண்பா நண்பிஸ் என்று சொல்லி விட்டு தோழா, தோழிஸ் என மாற்றினார். எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கலாம். இந்த உருமாற்றம் சவாலானதே.
14) கட்சிப் பெயர், கொடி வடிவமைப்பு, தம் வழிகாட்டிகள் பற்றி விரிவாக விளக்கி விஜய் வாய்ஸ் ஓவரில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவும் நல்ல முயற்சி. வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் கேலிகளுக்கும் பதில் அதில் உண்டு.
15) ஒட்டுமொத்தப் பேச்சில் பல சின்ன விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. சில வெற்றுக் கூவல்களாக இருந்தன. ஒரு கன்னிப் பேச்சில் அவற்றை எல்லாம் ஒரு தடுமாற்றமாக அல்லது உணர்ச்சிவசமாகக் கருதி மன்னிக்கலாம். பெரும்பாலும் நல்ல உரைதான். விஜயின் முதல் அடி களிற்றடியாகவே இருக்கிறது!”