மெய்யழகன் (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சுவாமி நடித்த மெய்யழகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூரில் இருக்கும் தங்கள் பரம்பரை வீட்டை நிர்பந்தங்களால் எழுதிக் கொடுத்து விட்டு பிழைப்பு தேடி சென்னை வருகிறது ஜெயப்பிரகாஷ் குடும்பம். அரவிந்த் சுவாமி இளைஞராக வீட்டையும், சொந்தந்தங்களையும் பிரிய மனமில்லாமல் அழுதபடி வீட்டை விட்டு கிளம்புகிறார். பல ஆண்டுகள் கழித்து தங்கை உறவு முறை திருமணத்திற்கு தஞ்சை வருகிறார் அரவிந்த் சுவாமி.
பல ஆண்டுகளாக பிரிந்த உறவுகளும் நட்புகளும் அவரை வரவேற்கிறது. அங்கு கார்த்தியும் அத்தான் என்று வாய் நிறைய அழைத்து அவருக்கு அறிமுகமாகிறார். அவர் வாழ்க்கையில் இதுநாள் வரை மறைந்து கிடைந்த பல அழகான விஷயங்களையும், உணர்வுகளையும் மீட்டெடுக்கிறார் கார்த்தி. தொண தொண என்று பேசிப்பேசியே பதிய வைக்கும் கார்த்தியை அவ்வளவு எளிதாக மறக்க முடியாமல் தவிக்கிறார். ஆனால் அவர் கார்த்தியை பற்றி எடை போட்ட தவறான நினைப்புக்கு அவரிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறார். அது நடந்ததா ? கார்த்தி யார் ? என்பதை உணர்ச்சிப் பொங்கும் திரைக்கதையில் பிரமிக்க வைத்து சொல்லியிருக்கிறார் பிரேம்குமார்.
மென்மையான ஃபீல்குட் படங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.
1000-babies (1,000 பேபீஸ் – மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார்
நஜீம் கோயா இயக்கத்தில் ரகுமான், நீனா குப்தா நடித்துள்ள 1000 பேபீஸ் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
பிரசவ ஆஸ்பத்திரி ஒன்றில் நர்ஸாக வேலை பார்க்கும் நீனா குப்தா, அங்கு பிறக்கும் சுமார் 1,000 குழந்தைகளை இடம் மாற்றி விடுகிறார். இதனால் அந்த குழந்தைகள் தங்கள் சொந்த வீட்டில் வளராமல் வெவ்வேறு வீடுகளில் வளர்கின்றன. இதில் ஒரு குழந்தையை அவரே வளர்க்கிறார்.
கடைசி கட்டத்தில் தான் செய்த இந்த தவறை 2 கடிதங்களாக எழுதி மாஜிஸ்திரேட்டுக்கும், காவல்துறை அதிகாரிக்கும் நீனா குப்தா அனுப்பி வைக்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பெரும் பிரச்சினையாகிவிடும் என்று கருதும் இருவரும் அதை மறைத்துவிடுகிறார்கள். ஆனால் 12 ஆண்டுகள் கழித்து அவர் மாற்றிவைத்த குழந்தைகள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள் இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பதுதான் இந்த வெப் சீரிஸின் கதை.
இந்த கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ரகுமான் சிறப்பாக நடித்துள்ளார்.
ஐந்தாம் வேதம் (தமிழ் வெப் தொடர்) – ஜீ5
இதிகாச கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து கதைகள் செய்வதில் நாகாவின் படைப்புகள் பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வந்திருக்கும் இணையத்தொடர் இது.
காசியில் பூஜைக்காக சென்ற தன்ஷிகாவிடம், சாமியார் ஒருவர் மரப்பெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, அதனை தமிழகத்தின் தென்கோடியில் உள்ள அய்யங்கார்புரம் என்ற கிராமத்திற்கு எடுத்துச் செல்ல சொல்கிறார்.
அந்த மரப்பெட்டியை உன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது விதி என்று கூறி அதை தன்ஷிகாவின் கையில் கொடுத்ததும் அவர் இறந்து விடுகிறார்.
வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக மரப்பட்டியை தூக்கிக் கொண்டு தமிழகத்திற்கு வருகிறார்., அங்கிருந்து பாண்டிச்சேரி செல்ல திட்டமிடுகிறார். ஆனால், அதற்கு பின்னால் நடக்கும் திடீர் சம்பவங்கள் தன்ஷிகாவை அய்யங்கார்புரத்திற்கு வர வைத்து விடுகிறது.
அங்கிருக்கும் பழமை வாய்ந்த கோவிலுக்குச் சென்று, அங்குள்ள பூசாரியிடம் மரப்பட்டியை கொடுக்கிறார் தன்ஷிகா பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அந்த பூசாரி, அதனை வாங்க மறுத்துவிடுகிறார்.
அதை அந்த கோவிலில் விட்டுவிட்டு அந்த ஊரை விட்டு வெளியேற நினைக்கிறார் தன்ஷிகா. ஆனால், கிராமத்தை விட்டு அவரால் வெளியேற முடியவில்லை.
அதுமட்டுமல்லாமல், மரப்பெட்டியை அடைய பலரும் முயற்சிக்கின்றனர். மரப்பெட்டியின் மர்மம் தான் என்ன.? ஐந்தாம் வேதம் என்ன.? ஐந்தாம் வேதத்தை கண்டிபிடிக்க தடையாக இருப்பவர்கள் யார் யார்.? என்ற கேள்விகளுக்கான விடை தான் மீதித் தொடருக்கான கதை.
பல வருடங்களுக்கு முன் பலரையும் உறைய வைத்த மர்மதேசம் என்ற தொடரினை இயக்கிய நாகாவின் இயக்கத்தில் தான் இந்த தொடர் உருவாகியிருக்கிறது.
கடைசி உலக போர் (தமிழ்) – அமேசான் ப்ரைம்
2028-ம் ஆண்டில் ஐ.நா.சபையில் இருந்து விலகி, சீனாவும் ரஷ்யாவும் ‘ரிபப்ளிக்’ என்ற கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் இணையாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜி.என்.ஆர் (நாசர்) இருக்கிறார். ஊழல்வாதியான அவரது மைத்துனர் நடராஜ் (நட்டி நடராஜ்) ஆட்டி வைப்பதற்கேற்ப ஆட்சி நடத்துகிறார்.
ஜி.என்.ஆரின் திடீர் உடல்நலக் குறைவால், அவரதுஇடத்தில் மகள் கீர்த்தனாவை (அனகா) தனக்கேற்ற பொம்மையாகப் பொருத்தி வைக்க, அவரைக் கல்வி அமைச்சர் ஆக்குகிறார் நடராஜ்.ஆனால், தமிழரசனின் (ஹிப் ஹாப் ஆதி) வழிகாட்டுதலால், சுயமாகச் செயல்படத் தொடங்குகிறார் கீர்த்தனா. அவரை பின்னாலிருந்து இயக்கும்தமிழரசனைத் தீவிரவாதி என முத்திரை குத்தி, என்கவுன்ட்டர் செய்ய ஏற்பாடு செய்கிறார் நடராஜ்.அந்த நேரத்தில் மூன்றாம் உலகப் போர் உருவாகிறது.
ரிபப்ளிக் படைகளின் தாக்குதலுக்கு சென்னை இலக்காக, இதில் தமிழ்நாடு, இந்தியாவின் நிலை என்னவானது? நடராஜன், தமிழரசன் என்னவானார்கள்? உலகப் போர் முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை