ஈழத்தில் நடத்த இறுதிப் போருக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கதைச் சேர்ந்த வீரர்கள் சைனட் உட்கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் ஒருவரான நாயகி நவயுகாவை காப்பாற்றி, அடைக்கலம் கொடுக்கிறார் நாயகன் புதியவன் இராசையா.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார். இந்த மூவரும் போருக்குப் பிந்தைய தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.
அப்போது ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதை கண்டு வருந்தும் புதியவன் இராசையா, பெண்களை ஒன்றிணைத்து ஒரு சங்கம் தொடங்கி அதன் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை சொல்லும் படமாக வந்திருக்கிறது ஒற்றைப் பனைமரம்.
இதுவரை வந்த ஈழம் பற்றிய திரைப்படங்களில் போராளிகள் போராட்டம் பற்றி மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. இந்த போராட்டம் மக்களை எந்த அளவுக்கு பாதித்திருந்தது என்பதையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் புதியவன் ராசையா. போருக்குப் பின் முகாம் வாழ்க்கையில் படும் துயரங்கள், குறிப்பாக பெண்கள் குழந்தைகளை வளர்க்க முடியாமல் பசிக் கொடுமையால் பாலியல் தொழில் செய்வதாகவும் காட்டப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிர்ச்சியான காட்சியாகவும் இருக்கிறது. பெண் போராளிகளுக்கு தமிழ் மக்களே ஆதரவு கொடுக்காமல் நிராகரிப்பதும் கசப்பான உண்மை என்கிறார் புதியவன். இப்படியான சம்பவங்களை தொகுத்து படத்தில் வைத்திருப்பது முதல் முறை பார்க்க முடிகிறது.
புதியவன் ராசையா முதன்மை பாத்திரத்தில் இயல்பாக வருகிறார். பிரதான இன்னொரு பாத்திரத்தில் நவயுகா முன்னாள் பெண் போராளியாக காட்டப்படுகிறார். விரக்தி, வெறுப்பு, எதிர்க்கும் துணிச்சல் என்று நடிப்பில் நவரசம் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதாக நிதி வசூல் செய்யும் நபர் தங்கள் வளத்தை மட்டுமே கவனத்தில் கொள்கிறார்கள் என்பதை காட்டும் இடம் சமகால அரசியலைக் காட்டுகிறது. படத்தில் வசனங்களும், பாத்திரங்களும் முன்னாள் போராளிகளின் இன்றைய நிலையை சொன்ன இடத்திலும் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடாக இருக்கிறது.ஆனால் அதுவே இன்றைய தமிழர் நிலையாகவும் இருக்கிறது.
தொழில் நுட்ப ரீதியாக எளிய காட்சிகளாக காட்டப்பட்டிருப்பது குறை. இசையும், ஒளிப்பதிவும் இன்னும் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அஜாதிகாவாக வரும் பெண் பரிதாபத்தை அள்ளுகிறார். விமர்சங்களுக்கு அப்பாற்பட்டு தமிழர்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டியிருக்கிறது படம்.