No menu items!

இர்ஃபான் கைதாவாரா – மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – அமைச்சர் உறுதி

இர்ஃபான் கைதாவாரா – மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் – அமைச்சர் உறுதி

மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் யூடியூபர் இப்ரான் மற்றும் பெண் மருத்துவர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, “இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” என்று சுகாதாரத் துறை அமைட்டர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூபர் இர்பான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார். பாலினம் குறித்த வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் வழங்கினார். இதையடுத்து அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவை சிகிச்சையின்போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ந் தேதி இர்பான் பதிவு செய்தார். இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

ஆபரேசன் தியேட்டருக்குள் கேமராக்களுடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும். இதில், எந்தவித மருத்துவ பயிற்சியும் இல்லாமல் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது கடும் கண்டனத்திற்கு உரியது என டாக்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபமான நிலையில், யூடியூபில் வெளியான சர்ச்சை வீடியோவை நீக்கக்கோரி மருத்துவத்துறை சார்பில் இர்பானுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யூடியூபர் இர்பானின் மனைவி தொடர்பான மருத்துவ ஆவணங்களை கைப்பற்றிய செம்மஞ்சேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக ‘பிரசவம் பார்த்த டாக்டர் நிவேதிதா மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி இளங்கோவன் என்பவர் புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் பிரசவம் நடந்த சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில், தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினரிடம் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதில், யூடியூபர் இர்பான் அறுவை சிகிச்சை அரங்குக்குள் அத்துமீறி நுழைந்து பிரசவத்தை வீடியோ பதிவு செய்ததும், மருத்துவர் நிவேதிதா முறையாக பயிற்சி பெறாத நபரிடம் கத்திரிக்கோலை கொடுத்து தொப்புள் கொடியை வெட்ட வைத்ததும் உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, யூடியூபர் இர்பான் மற்றும் மருத்துவர் நிவேதிதா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்கத்தின் இணை இயக்குநர் இளங்கோவன் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் மருத்துவர் நிவேதிதாவை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார் யார்? போன்ற விபரங்களைக் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யூடியூபர் இர்பான் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவ சட்ட விதிகளை மீறியதற்காக இர்பான், அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர் நிவேதிதா ஆகியோர் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை. இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சர்ச்சைக்குரிய வீடியோவை யூ டியூப்பில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...