உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறார் சல்மான்கான். 70 போலீஸாரின் பாதுகாப்பு வளையத்தில்தான் இப்போது அவரது வாழ்க்கை நகர்ந்துகொண்டு இருக்கிறது. திரைப்படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக இருக்கும் சல்மான்கான் இப்படி உயிர் மீதான பயத்துடன் இருப்பதற்கு காரணம் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற நிழல் உலக தாதா.
கடந்த ஆகஸ்ட் 2023 முதல் 2024 ஏப்ரலுக்குள் சல்மான் கானை, தான் கொலை செய்யப்போவதாக, லாரன்ஸ் முன்பு அறிவித்திருந்தார். இந்த கால அவகாசம் முடிந்ததால் மகராஷ்டிர போலீஸார் சற்று பெருமூச்சு விட்டிருந்தனர். இந்த சூழலில்தான் கடந்த அக்டோபர் 12-ம் தேதி இரவு, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்க, இப்போது சல்மான் கானுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்
பஞ்சாபின் ஃபாசில்காவில் உள்ள தத்ரன்வாலி கிராமம்தான் லாரன்ஸ் பிஷ்னோயின் பூர்வீகம். அவரது அப்பா லவீந்தர் சிங், ஹரியானா காவல்துறை கான்ஸ்டபிளாக இருந்தவர். சிறுவயதில், பிஷ்னோய் அழகாக இருந்ததால் குடும்பத்தினர் அவரை ‘லாரன்ஸ்’ என அழைத்துள்ளனர். அதுவே காலப்போக்கில் அவருடைய அடையாளமாகவும் மாறிப்போனதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பஞ்சாப் மாநிலம் அபோஹரில் பிளஸ் 2 படித்துவிட்டு மேல் படிப்புக்காக 2010-இல் சண்டிகருக்குச் சென்றுள்ளார் பிஷ்னோய். 2011-ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் சேர்ந்தார். இங்கிருந்து மாணவர் அரசியலிலும் நுழைந்தார். டி.ஏ.வி கல்லூரியில் சேர்ந்து, மாணவர் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கிய பிறகு, அங்கே கோல்டி ப்ராருடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்காக வேலை பார்க்கும் அதே கோல்டி ப்ரார் தான், இங்கும் இந்தக் கும்பலை நிர்வகித்து வருவதாகக் கூறப்படுகிறது. லாரன்ஸ் 2011-2012-ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பை (SOPU) உருவாக்கி அதன் தலைவராக ஆனார்.
கல்லூரி மாணவராக இருக்கும்போது அவர் மீது முதல் வழக்கு பதியப்பட்டுள்ளது. லாரன்ஸ் மீது இப்போது 50 கிரிமினல் வழக்குகள் உள்ளன. தற்போது 22 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்மீதான 7 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால்தான் தற்போது சிறையில் இருக்கும் அவர், பல்வேறு நீதிமன்றங்களில், அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி வருகிறார்.
2022-ஆம் ஆண்டில், கட்ச் பகுதியில் பாகிஸ்தான் கப்பலில் இருந்து பெருமளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கிலும், பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் லாரன்ஸுக்கு தொடர்பிருப்பதாக அவர்மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்தனர். இப்படி, பல வழக்குகள் அவர்மீது பதியப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் முயற்சிக்காக அவர் கவனம் ஈர்க்கப்பட்டார்.
சல்மான் கான் மீது என்ன கோபம்?
பிஷ்னோய் சமூகத்தில் black bucks இன மான்களை புனிதமான விலங்காகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், 1998 ஆம் ஆண்டு ’ஹம் சாத் சாத் ஹை’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் சல்மான் கான், ராஜஸ்தானில் இரண்டு மான்களை வேட்டையாடி கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக, சல்மானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். சட்டம் அவரை விட்டாலும், தாங்கள் புனித விலங்காக பார்க்கும் மானைக் கொன்ற சல்மான் கானை இன்னும் விடாமல் துரத்தி வருகிறார் பிஷ்னோய்.
இந்த சூழலில் தேசிய பாரதிய பிஷ்னோய் மகாசபை தலைவர் தேவேந்திர புதியா அளித்த பேட்டியில், ”நடிகர் சல்மான் கான் எங்களது இடத்திற்கு வந்து தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படிக் கேட்டால் அவரை மன்னிப்பது குறித்து எங்களது சமுதாய தலைவர்கள் ஒன்று கூடி அவருக்கு மன்னிப்பு கொடுப்பது குறித்து முடிவு செய்வார்கள். எங்களது மத குரு ஜம்பேஷ்வரின் 29 விதிகளில் 10-வது விதியில் மன்னிப்பது குறித்து தெரிவித்துள்ளார். யாராவது தவறு செய்தால் அதற்காக அவர் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டால், மன்னித்துவிடுவோம். எங்களது சமுதாயம் யாருக்கும் தீங்கு விளைவிக்காது” என்று தெரிவிதுள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளர் கொலையிலும் தொடர்பு?
சல்மான்கான் விஷயத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த பிஷ்னோய், இப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலையில் கனடா அரசின் பார்வையிலும் விழுந்துள்ளார். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலையில் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசும் குற்றம் சாட்டியுள்ளது. அதனால் பிஷ்னோய் மீதான சந்தேகப் பார்வை சர்வதேச அளவில் விரிந்திருக்கிறது.
மொத்தத்தில் மும்பையின் புதிய தாவூத் இப்ராஹிமாக எல்லோரையும் மிரட்டி வருகிறார் லாரன்ஸ் பிஷ்னோய்.