இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டு வரும் விரிசலுக்கு என்ன காரணம்? இது சரியாக வாய்ப்பு உள்ளதா? இந்த பிரச்சினைக்கு பின்னால் அமெரிக்கா உள்ளதாக சிலர் குற்றம்சாட்டுவது சரியா?
இந்தியா – கனடா இடையே என்ன பிரச்சினை?
கனடா நாட்டு குடிமகனான சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை ஒரு ‘காலிஸ்தான் பயங்கரவாதி’ என்று இந்தியா கூறிவருவது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்த கொலைக்கு இந்தியா தான் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். அதனை இந்தியா முழுமையாக நிராகரித்தது.
கனடாவில், ‘Persons of Interest’ என்பது ஒரு குற்றத்தைப் பற்றிய முக்கியமான தகவல்களை கொண்டிருக்கும் நபர்களை குறிக்கும் சொற்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிஜ்ஜாரின் கொலைக்குப் பிறகு, ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த கொலைவழக்கில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க தேவையான ஆதாரம் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியா இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது. மேலும், கனடாவிடம் அதற்கான ஆதாரத்தையும் கேட்டது.
அதன் பிறகு இரு நாடுகளும் அவரவர் பிரதிநிதிகளை சொந்த நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இதன் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே சூடான கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது இருநாட்டு உறவும் மோசமான நிலையை எட்டியுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தானிய இயக்கத்தை ஆதரித்து, கனடாவில் வாழும் சீக்கியர்கள் வன்முறையை தூண்டிவருவதாக இந்தியா நம்புகிறது. இது தான் இரு நாட்டுக்கும் இடையே நிலவும் முக்கிய பிரச்னை.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, பஞ்சாபில் ஏற்பட்ட வன்முறையின் ஒரு மோசமான தருணத்தில் இந்திய ராணுவம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதன் பிறகு 1984-ஆம் ஆண்டு இந்தியாவின் அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இரண்டு சீக்கிய மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவைக் காட்டிலும் கனடாவில் அதிக சீக்கியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கனடாவில் வசிக்கும், காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வரும் நபர்கள் என இந்தியா குற்றம்சாட்டுபவர்களுக்கு எதிராக கனடா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதுவரை இந்த கோரிக்கையை கனடா நிராகரித்து வந்துள்ளது. கனடா, கருத்து சுதந்திரத்திற்கும் தனிநபர் சுதந்திரத்திற்கும் ஆதரவளிக்கும் ஒரு நாடி; எனவே, ஒருவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதை தடுத்து நிறுத்தாது என்று கனடா கூறுகிறது.
இதற்கு இந்தியா, “கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களின் வாக்குகளை கணக்கில் வைத்து இவ்வாறு பேசுகிறார்” என்று வெளிப்படையாக குற்றம்சாட்டியது.
தூதர்கள் வெளியேற்றம்
இந்தியா – கனடா இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ள நிலையில், கனடாவுக்கான இந்தியாவின் தூதரர் சஞ்சய் குமார் வர்மாவையும், சில தூதரக அதிகாரிகளையும் இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வதாக கடந்த 14-10-24 (திங்கள்கிழமை) அன்று தெரிவித்தது. ஆனால், சஞ்சய் குமார் வர்மா உட்பட ஆறு இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளை ஏற்கனவே வெளியேற்றிவிட்டதாக கனடா கூறியது. தூதரக அதிகாரிகள் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பை நீக்கிய கனடா, விசாரணையில் கனடாவுடன் ஒத்துழைக்கவும் இந்தியா மறுத்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியது. நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதர் மற்றும் இதர தூதர அதிகாரிகளை ‘விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள்’ என கனடா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பின்னர், கனடா தூதர் ஸ்டூவர்ட் ரோஸ் வீலர் உள்பட அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற்றுவதாக இந்தியா அறிவித்தது. கனடாவின் தூதர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்த பிறகு, ட்ரூடோ அரசாங்கம் இந்திய அதிகாரிகளுக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் இந்தியாவிற்கு வழங்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியாவை கனடா களங்கப்படுத்துகிறது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள கனடாவின் தற்காலிக தூதர் இதற்கு பதிலளித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் அனைத்து கோரிக்கைகளையும் கனடா நிறைவேற்றிவிட்டது. நிஜ்ஜாரின் கொலை வழக்கில் இந்திய தூதர்களின் பங்கு என்ன என்பதை நிரூபிக்கும் ஆதாரத்தையும் இந்தியாவுக்கு வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இனி அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா தான் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விரிசல் சரியாகுமா?
இந்தியா -கனடா இருநாட்டு உறவும் மோசமான நிலையை எட்டியுள்ளது என்றாலும், இந்த நிலையை சீராக்க சிறிய அளவில் சாத்தியம் இருப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது ட்ரூடோவும், மோதியும் சந்தித்துக் கொண்டனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஆசியான் (ASEAN) உச்சிமாநாட்டிலும் அவர்கள் சந்தித்தனர். ஆனால், இரு நாட்டு உறவுகளும் மேம்படுவதற்கான ஒரு அறிகுறியும் அதில் தெரியவில்லை.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சக்திகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற கனடாவின் உத்தரவாதம் கிடைக்காத வரையில் இரு நாட்டு உறவுகளும் மேம்படுவது சவாலானது தான் என்று கூறுகின்றனர் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் வல்லுநர்கள்.
இதனிடையே, வெனிஸ் நகரில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்புக்கு முன்னதாக, இந்தியாவுடனான உறவுகள் பதற்றமானவை மற்றும் மிகவும் கடினமானவை என்று கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி கூறியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கொலைகள் எதிர்காலத்திலும் கனடா மண்ணில் நடக்கலாம் என்று அவர் அச்சம் தெரிவித்திருந்தார்.
பின்னணியில் அமெரிக்கா உள்ளதா?
இந்தியா – கனடா இடையேயான குழப்ப சூழலுக்கு மத்தியில் அமெரிக்கா ஒரு கருத்தையும் வைத்துள்ளது. 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடா பிரதமர் இந்தியா மீது குற்றம் சாட்டியிருந்தற்கு சில வாரங்கள் கழித்து, அமெரிக்கக் குடிமகன் குர்பத்வந்த் சிங் பண்ணுவைக் கொலை செய்ய இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா முயன்றார் என்று அமெரிக்க பெடரல் நீதிமன்றம் குறிப்பிட்டது. பண்ணு ஒரு அமெரிக்க வழக்கறிஞர். காலிஸ்தான் ஆதரவாளரும் கூட.
அமெரிக்காவில் சில இந்திய அதிகாரிகளுக்கு எதிராக சிவில் வழக்குகளை சமீபத்தில் பண்ணு பதிவு செய்துள்ளார் . இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெயரும் இடம்பெற்றுள்ளது. பாரம்பரியமாக ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர மாநாட்டிற்கு பிரமருடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செல்வது வழக்கம். இந்த வழக்கின் காரணமாக தோவல் இந்த ஆண்டு அந்த மாநாட்டிற்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அதிகாரிகளை அமெரிக்கா மிரட்டிய போது அமைதி காத்த இந்தியா, கனடா விவகாரத்தில் வெளிப்படுத்தும் தொனி வேறாக உள்ளது கவனிக்கத்தக்கது.
சர்வதேச அரசியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையேயான உறவில் ஏற்பட்டு வரும் விரிசல் ஆச்சரியம் அளிப்பதாக சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ‘சோவியத் யூனியன் உடைந்த பிறகு எந்த மேற்கத்திய நாட்டுடனும் இந்தியாவின் உறவு இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. பனிப்போருக்கு பிறகு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா உறவுகளை மேம்படுத்தி, படிப்படியாக முழுமையான சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தது. ஜி7, நேட்டோ நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. கனடா இந்த இரண்டு குழுக்களிலும் ஒரு பகுதியாக இருக்கிறது. மேலும், அமெரிக்காவுடன் மிக நெருக்கமான இராணுவ உறவைக் கொண்டுள்ளது நாடு கனடா. அமெரிக்கா – கனடா இரு நாட்டுப் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார, மூலோபாய திசையில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இந்தியா தானாகவே முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான கனடாவுடன் இந்தியாவின் உறவு மிகவும் மோசமாக மாறியது ஆச்சரியமளிக்கிறது” என்கிறார்கள் அவர்கள்.