ரஜினிகாந்த் உடல்நிலை தற்போது சீரடைந்து விட்டது. எப்போதுமே ரஜினியின் வில் பவர் என்று சொல்லக்கூடிய அசாத்திய சக்தி அவரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டார் ரஜினி
அவர் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர், கன்னட நடிகர் உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மேலும் அமீர்கானும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ரஜினிகாந்த் முன்கூட்டியே படக்குவினரிடம் தெரிவித்து விட்டார். இதனால் உஷாராக மற்ற காட்சிகளையெல்லாம் எடுத்து முடித்து விட்டார்.
இதன் பிறகு ரஜினியின் ஓய்வுக்குப் பிறகு வரும் 16ம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் தொடர் மழையால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள். அடுத்த இரு தினங்களுக்குப் பிறகு ரஜினி கலந்து கொள்வார். ஒரே ஷெட்யூலில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை எடுக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இன்னும் 2 படங்கள் ரஜினிகாக காத்திருக்கும் நிலையில் தொடர்ந்து ரஜினிகாந்த் படங்களில் நடிப்பது குறித்து குடும்பத்தினர் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா ரஜினியிடம் பேசியதாகவும் படங்களில் நடித்தது போதும் ஒரு முடிவு எடுத்து ஓய்வு அறிவிப்பு செய்ய வேண்டும் அதுதான் உடல் நிலைக்கு நல்லது என்பதை ஒரு சகோதரராக அக்கறையோடு பேசியிருக்கிறார். இது ரஜினியின் வீட்டிலும் எதிரொலித்திருக்கிறது என்கிறார்கள். இளைய மகள் சவுந்த்ர்யா மருமகன் விசாகன் ஆகியோர் ரஜினியிடம் இது பற்றி வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள்.
முதல் முறையாக ரஜினிகாந்த் தீவிர யோசனையில் சிரித்துக் கொண்டே மருமகனிடம் தலையாட்டி இருக்கிறார். அதனால் ஜெயிலர் 2 படத்தின் இயக்குனர் நெல்சன் உட்பட சிலரிடம் தனது அடுத்த படங்களின் கதை நிலை என்ன என்பதை பற்றி விசாரித்திருக்கிறார் ரஜினி. கதை தயாரானால் எத்தனை நாட்கள் தேவைப்படும் அடுத்த ஆண்டு எப்போது தொடங்கலாம் எப்போது நிறைவு செய்யலாம் என்பது பற்றியெல்லாம் பேசியிருப்பதாக தெரிகிறது.