No menu items!

மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் – அதிகாரிகளுக்கு முதல்வர் சொன்ன அறிவுரைகள்

மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் – அதிகாரிகளுக்கு முதல்வர் சொன்ன அறிவுரைகள்

சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.14) நடைபெற்றது. கூட்டத்தில், மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், காவல்துறை டிஜிபி, சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். துறைச் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ள ஆலோசனைகள் வருமாறு…

அக்டோபர் 15-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

15-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த வேண்டும்.

நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

ரொட்டி, குடிநீர் பாட்டில்களை நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

முட்டுக்காடு, பக்கிங்ஹாம் கால்வாய் – கலைஞர் கருணாநிதி பாலம் அருகில், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர்வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும்.

மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.

பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மீட்புப் பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள் JCB இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.

பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதிகரிகளுக்கு முதலவர் ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

பொதுமக்களுக்கு முதல்வர் சொல்லியிருக்கும் அறிவுரைகள்

விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.

அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாட்டை செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...