ரஜினி அதியன் என்ற பெயரில் அதிரடியான என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். கன்னியாகுமரியில் ஏழைக்குழந்தைகளுக்கு ஆசிரியரான துஷாரா விஜயன் கொலை செய்யபப்டுகிறார். ஆசிரியர்கள் போராட்டம் நாடு முழுக்க பரவுகிறது. இதனால் அரசுக்கு கொலைகாரனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்கிற நிர்பந்தன். இதற்கு ஒரே வழி.. போலீஸ் அதிகாரியான அதியனை நியக்கிறார் கமிஷனர். ஏற்கனவே விசாரித்த அதிகாரிகளின் விசாரணைப்படி கொலையாளியை தேடுகிறார் அதியன். அவன் மறைந்திருக்கும் இடத்தை தேடிச்சென்று பிடிக்கச்செல்லும் அவர் என்கவுண்டர் செய்கிறார்.
இந்த பரபரப்பு மனித உரிமைகள் ஆணையத்திடம் சென்று சத்யதேவ் என்ற நீதியரசர் விசாரணைக்கு வருகிறார். அவர் விசாரணையில் இறந்துபோன குணா ஒரு நிரபராதி என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அதியன் என்ற ரஜினி அடுத்து என்ன செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல்.
ரஜினி அமைதியான நடிப்பிலும் ஆர்ப்பாட்டமான ஸ்டைலிலும் வருகிறார். இன்னும் இளைமையாக தெரியும் முகத்திற்கு ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக இருக்கிறது. மனைவி மஞ்சுவாரியர், துஷாரா விஜயன் அனைவரிடமும் பாசம் காட்டும் போதும், பகத் பாசில் மீது வைத்திருக்கும் நம்பிக்கையான பார்வையும் துஷாராவின் மரணத்தால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் இயல்பாக வெளிப்படுகிறது. பகத் பாசிலை கட்டிப்பிடித்து அழும் இடத்தில் நெகிழ்ச்சி.
அமிதாப்பச்சன் சத்யதேவ் நீதியரசராக வந்து கம்பீரம் காட்டுகிறார். ஆனால் அவர் எதையும் உருப்படியாக செய்ததாகத் தெரியவில்லை.
படத்தில் கைதட்டல் வாங்குவதும், கலகலப்பாக்குவது பகத் பாசிலின் வேலை. அசத்தியிருக்கிறார். ராணா வந்து நின்றாலே திரை நிரம்பி விடுகிறது. இதில் வில்லத்தனமும் செய்திருக்கிறார். கோபம்காட்டி காட்சிகளை வலுப்படுத்துகிறார்.
ரஜினிக்கும் ராணாவுக்கும் பகடைக்காயாக மாறி நிறைவாக தெரிகிறார் அபிராமி. துஷாரா விஜயன் ஆசியராக தன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு.
கல்வியும் நீதியும் அனைவருக்கும் பொது அதில் ஏற்றத்தாழ்வு காட்டுவது கூடாது என்பதையும், சட்டம் இருப்பவர்களுக்கு ஒரு மாதிரியும், இல்லாத ஏழைகளுக்கு வேறு மாதிரியாகவும் செயல்படுவது தவறு என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குனர் ஞானவேல் இந்த முறையும் சமூகத்தின் மீது அக்கறை செலுத்தும் கதையை கையிலெடுத்திருக்கிறார்.
வசனத்தில் ஆங்காங்கே கல்வித்தந்தைகளுக்கும், ’நீட்’ டியூசன் கற்பிக்கும் செண்டர்களுக்கும் சவுக்கடி கொடுத்திருக்கிறார். சந்தேகத்திற்கிடமாக ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்து விட்டு, பிறகு அவரே அதை நியாயப்படுத்தும் குணா கதாபாத்திரம் தடுமாற்றமான குறை. கிஷோர் கேரகடர் சஸ்பென்ஸ்.