இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 86. ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரத்தன் டாடாவைப் பற்றிய மறக்க முடியாத சில நினைவுகளின் தொகுப்பு
ஊழியர்களின் மனம் கவர்ந்தவர்
இந்தியன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடையே கடந்த 1992-ம் ஆண்டில், ஒரு தனித்துவமான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டெல்லி- மும்பை இடையிலான விமானப் பயணங்களின்போது, அவர்களை மிகவும் கவர்ந்த பயணி யார் என அவர்களிடம் கேட்கப்பட்டது. ரத்தன் டாடா என்ற பெயருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன.
இதற்கான காரணத்தை அறிய முயன்றபோது, ‘வழக்கமாக தனியாக வரும் ஒரே விஐபி அவர் மட்டுமே. அவரது பையையோ அல்லது கோப்புகளையோ எடுத்துச் செல்ல அவருடன் உதவியாளர்கள் யாரும் ஒருபோதும் வந்தது கிடையாது. விமானம் புறப்பட்டவுடன், அவர் அமைதியாக வேலை செய்வார். அவர் வழக்கமாக மிகக் குறைவான அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஒரு பிளாக் காபி (Black Coffee) கேட்பார். தனக்கு விருப்பமான காபி கிடைக்கவில்லை என்பதற்காக விமான பணிப்பெண்ணை அவர் ஒருபோதும் திட்டியதில்லை’ என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.
நாய்களின் காவலர்
ரத்தன் டாடாவிடம் ‘டிட்டோ’ மற்றும் ‘டேங்கோ’ என்ற இரண்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் இருந்தன, அவற்றை அவர் மிகவும் நேசித்தார். நாய்கள் மீதான அவரது நேசத்திற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், பம்பாய் ஹவுஸில் உள்ள அலுவலகத்திற்கு ரத்தன் டாடா வரும்போதெல்லாம் தெருநாய்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும். மும்பையில் உள்ள டாடா நிறுவனத்தின் அலுவலகத்தில் தெரு நாய்களுக்காகவே ஒரு ஏசி அறை அமைக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 6, 2018 அன்று, பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், ரத்தன் டாடாவுக்கு அவரது பொதுநலப் பணிகளுக்காக ‘ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வழங்க இருந்தார். இதற்காக ரத்தன் டாடா பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்க வேண்டும். ஆனால் விழாவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தனது நாய் டிட்டோவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று விழா ஏற்பாட்டாளர்களிடம் ரத்தன் டாடா தெரிவித்தார். இதுகுறித்து இளவரசர் சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டபோது, ‘அதுதான் நல்ல மனிதனின் குணம். அப்படிப்பட்ட மனிதன்தான் ரத்தன் டாடா’ என்று அவர் கூறியிருக்கிறார்.
தனிமை விரும்பி
ரத்தன் டாடா தனிமையை மிகவும் நேசித்தார். தனது வீட்டில் தனிமையில் இருக்கும்போது கோப்புகளைப் படிப்பார். அவர் மும்பையில் இருந்தால், அலிபாக்கில் உள்ள தனது பண்ணை வீட்டில் வார இறுதி நாட்களைக் கழிப்பார். இந்த நேரத்தில் அவரது நாய்களைத் தவிர வேறு யாரும் அவருடன் இருக்கமாட்டார்கள். அவர் பயணம் செய்வதையோ சொற்பொழிவு ஆற்றுவதையோ விரும்பவில்லை. அவருக்கு புகழ் வெளிச்சமும், கைதட்டலுக்கு பேசுவதும் மிகவும் எரிச்சலூட்டும் விஷயமாக இருந்தது.