ஹரியானா மாநிலத்தில் கருத்துக் கணிப்புகளை மீறி பாஜக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி ஆடைந்த்தற்கான காரணங்கள்…
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்:
நாடாளுமன்ற தேர்தலில் ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளையும், பாஜக 5 தொகுதிகளையும் வென்றது. ஆனால் வாக்கு சதவீதத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது. இதனால் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் நிச்சயம் ஜெயிப்போம் என்ற அதீத தன்னம்பிக்கையில் காங்கிரஸ் தலைவர்கள் இருந்துள்ளனர். அதனால் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டவில்லை. அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியைவிட குறைந்த வாக்குகளை பெற்ற பாஜக, தீவிரமாக தேர்தல் பணியாற்றியது. இது அக்கட்சிக்கு கூடுதல் வாக்குகளையும், கூடுதல் தொகுதிகளையும் பெற்று கொடுத்தது.
தொடரும் உள்கட்சி மோதல்:
ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை, அம்மாநில முதல்வராக இருந்த நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஒற்றுமையாக தேர்தலைச் சந்தித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, முன்னாள் முதல்வர் ஹூடா தலைமையில் ஒரு அணி, குமாரி செல்ஜா தலைமையில் ஒரு அணி, மூத்த தலைவர் சுர்ஜேவால் தலைமையில் ஒரு அணி என 3 அணிகளாக பிரிந்து கிடந்தது. கட்சி வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்ற மோதல் தேர்தலுக்கு முன்பே நிலவியது. இதனால் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுகுழியில் விழுவதற்கு இது முக்கிய காரணமாக அமைந்தது.
ஹூடாவின் ஊழல்கள்:
ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக முன்னாள் முதல்வர் ஹூடா இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஹூடா தலைமையில் ஆட்சியில் இருந்தபோது, அங்கு பல ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரையே காங்கிரஸ் கட்சி மீண்டும் முன்னிலைப்படுத்தியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் ஊழல் தலைதூக்குமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்குகள் விழவில்லை என்று கூறப்படுகிறது.
ஜாட் vs மற்றவர்கள்:
இந்த தேர்தலில் ஹரியானாவில் சுமார் 22 சதவீதம் உள்ள ஜாட் இனத்தவரின் வாக்குகளை காங்கிரஸ் பெரிய அளவில் நம்பி இருந்தது. ஜாட் இனத்தவரும் காங்கிரஸ் கட்சியின் பின்னால் இருந்தனர். தங்களுக்கு ஜாட் மக்களின் வாக்குகள் கிடைக்காது என்பதை தெரிந்துகொண்ட பாஜக, அதற்கு மாற்றாக ஜாட் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சமூக வாக்குகளை ஒன்றிணத்தது. இது காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகள்:
காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் பாஜகவிடம் மிகக் குறந்த வாக்குகளிலேயே தோற்றுள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களும் சிறிய பிராந்திய கட்சிகளும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சுயேட்சை வேட்பாளர்கள் அறுவடை செய்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறிவிட்டது.
பாஜகவின் தேர்தல் யுத்திகள்:
பாஜக ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை கையாண்டது. கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை சரி கட்ட மத்திய அமைச்சர் தார்மேந்திர பிரதானை களமிறக்கியது. தேர்தல் பிரசார குழு தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். தனது வழக்கமான பாணியில் தர்மேந்திர பா பிரதான் தீவிரமக களமாடினார். பாஜகவின் தேர்தல் குழுவும் சுறுசுறுப்பாக பணியாற்றி அதிருபதி வேட்பாளர்களை சரிகட்டுவது, வாக்குகளை சிதறவிடாமல் பெறுவது உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டியது.
மேற்கண்ட காரணங்களால் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.