சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து ஒரு மாதமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஊழியர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. என்ன நடக்கிறது காஞ்சிபுரத்தில்?
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் உள்ள சுங்குவார் சத்திரத்தில் தென்கொரியா நிறுவனமான சாம்சங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், 1,750 ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில், 1,100 ஊழியர்கள் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி 14 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கினர். இந்தப் போராட்டம் நாளடைவில் தீவிரம் அடைந்து வருகிறது.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், 8 மணி நேரம் வேலை, ஊதிய உயர்வு, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம், உணவு தரம் உயர்த்த வேண்டும், முறையான கழிவறைகள் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தைத் துவங்கினர்.
இந்தப் போராட்டம் தொடர்ந்து நீடித்துவந்த நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில், அமைச்சர்கள் அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, கணேசன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து போராட்டம் நடத்திவரும் தொழிலாளர்களுடனும் சாம்சங் நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவை எட்டுவதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழு போராடும் தொழிலாளர்களுடனும், சாம்சங் அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கடந்த 7-ம் தேதி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “மொத்தம் 12 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், சாம்சங் நிர்வாகம், அவர்களின் ஊழியர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதும், அவர்களின் மற்ற கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. லைநிறுத்தம் விரைவில் வாபஸ் பெறப்பட்டு, அனைத்து ஊழியர்களும் பணிக்குத் திரும்பி, தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் எங்கள் பயணத்தில் தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நம்புகிறோம்” என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், இதனையடுத்தும் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்த நிலையில் 8-ம் தேதி மீண்டும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நேற்று (7-ம் தேதி) நிறுவனம், சி.ஐ.டி.யு மற்றும் அவர்களுடன் இருக்கும் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபடாமல் பணியில் இருக்கும் ஊழியர்கள் என பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
போராட்டத்தில் இருக்கும் ஊழியர்கள், சி.ஐ.டி.யு.வை பதிவு செய்ய வேண்டும் எனும் ஒரு கோரிக்கையைத் தான் மிக முக்கியமாக வைக்கிறார்கள். அதேசமயம் நிறுவனம், நாங்கள் அனைத்து கோரிக்கையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சி.ஐ.டி.யு. பதிவு என்பது நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன வருகிறதோ அதன்படி செயல்படுவோம் என்று தெரிவித்தனர். எனவே இந்த ஒரு கோரிக்கைக்காக தான் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அனைவருக்கும் 21 ஆயிரம் ஊதியம் என்பது தவறான தகவல். ஒரே ஊழியருக்குத் தான் அந்த ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் அந்த ஊழியர் அதிகபடியான விடுமுறை எடுத்துள்ளார். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக விடுமுறை எடுத்தார் எனும் மனிதாபிமானம் அடிப்படையில் அவரைப் பணியில் இருந்து நீக்காமல் இன்னும் பணியில் வைத்திருக்கிறோம் என நிறுவனம் சொல்கிறது. மற்றப்படி அங்கு 30 ஆயிரம் முதல் 60, 70 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. ஐந்து ஆயிரம் ஊக்கத்தொகை உள்ளிட்ட மற்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறுவனம் ஏற்றுக்கொண்டது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஒரு மாதம் கடந்து போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று (8-ம் தேதி) இரவு சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்காகப் போட்டிருந்த பந்தல் உள்ளிட்டவற்றை அகற்றியுள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 10 ஊழியர்களை நள்ளிரவில் கைது செய்து, ஸ்ரீபெரும்பதூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பிறகு அவர்களைச் சொந்தப் பிணையில் மாஜிஸ்திரேட் விடுவித்தார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், “காவல்துறை மிக மோசமான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாகத் தொழிலாளர்களை மிரட்டுவதிலும் அவர்களை அச்சுறுத்துவதிலும் காவல்துறையே ஈடுபடுகிறது. அமைச்சர் எங்களுடைய கோரிக்கை என்னவென்றே புரிந்து கொள்ளவில்லை. அவர் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கிறாரா என்றே தெரியவில்லை.
சங்கத்தைப் பதிவு செய்வது என்பது எங்களுடைய உடனடி கோரிக்கை அல்ல. பதிவு செய்தால் எங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவோம் என்று எப்போதும்; எங்கேயும் நாங்கள் சொல்லவே இல்லை. ரிஜிஸ்ட்ரேஷன் என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது எங்களுக்குத் தானாகவே கிடைக்கும். அதற்கு அமைச்சருடைய தயவு எங்களுக்குத் தேவையில்லை.
எங்கள் கோரிக்கை ‘சங்கத்தை ஏற்க வேண்டும்; அங்கீகரிக்க வேண்டும்’ என்பதே. அதைக் கூட நிறுவனத்தை ஏற்றுக்கொள்ள செய்ய இயலவில்லை என்றால் எதற்காக அரசு; எதற்காக ஆட்சி” என்று தெரிவித்தார்.
இதனிடையே, தொழிலாளர்கள் கைதுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டது. அந்த மனு இன்று அவசர வழக்காக விசாரித்தது. அப்போது உயர்நீதிமன்றம், “சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடை இல்லை” என உத்தரவிட்டது.