அரவிந்த் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவருக்கு சில நாட்களாகவே தனக்குள் பெண்மையை உணர்கிறார். அதனால் தான் பெண்களுக்கான உடையை அணிந்து வர பள்ளியில் அனுமதி கேட்கிறார். ஆனால் பிரின்ஸ்பால் மறுக்கிறார். விஷயம் பள்ளியின் தாளாளர் வரை போகிறது. அவர் அரவிந்த் ஆசைக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். மறுநாள் புடவை அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன்.
படத்தில் அரவிந்த் என்ற பாத்திரத்தில் நடித்து படத்தை இயக்கியிருக்கிறா சம்யுக்தா விஜயன். திருநங்கைகள் பற்றி படங்களில் பொதுவாக காட்டப்படும் காட்சிகள் எதுவும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக அழகியலோடு எடுக்கப்பட்டிருப்பது படத்தின் பலம். பள்ளியில் முதல்வர், துணை முதல்வர் பாத்திரங்களும் சக ஊழியர்களாக வருபவர்களும் அமைதியான நடிப்பில் படத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.
திருநங்கைகளுக்கு சமூகத்தில் இருக்கும் அடிப்படையான பிரச்சனைகளை காட்டியிருப்பதோடு அதற்கு தீர்வாகவும் பேசியிருக்கிறது படம். அரவிந்த் அம்மாவான கீதா கைலாசம் மகனை விட்டுக்கொடுக்க முடியாமல் தவிப்பது சிறப்பான நடிப்பு.
உடற்கல்வி ஆசிரியராக வரும் பாத்திரம் அரவிந்த் வசம் எதிர்பார்க்கும் விஷயம் வெளியாவது திடுக். தீர்வாக எதையும் சொல்லாமல் க்ளைமேக் முடிந்திருப்பது யதார்த்த களத்தைக் காட்டியிருப்பது மனதை உலுக்குகிறது. கேள்விகளை எழுப்புகிறது.
சம்யுக்தா பல இடங்களில் நடிப்பிலும் இயக்கத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஸ்டீவ் பெஞ்சமின் படத்தின் தூணாக மாறியிருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்று எல்லாமே கச்சிதமாக இருக்கிறது.
ஒரு காட்சியை நீடி முழக்கி சொல்லும் விதத்தில் அலுப்பு ஏற்படுகிறது. பெண் உடை அணிந்த பிறகு தப்பு பண்ணிட்டேனோ என்று யோசிக்கும் இடத்தில் யதார்த்தமாக இருந்தாலும் நெருடல், கல்வி கற்கும் இடத்தில் மாணவர்கள் மத்தியில் வீணான குழப்பம் வரும் என்று முதல்வர் சொல்லும் இடம் நியாயமாகவே இருக்கிறது. பல முறை சொல்லப்பட்ட கதைதான் என்றாலும் தொடர்ந்து சொல்ல வேண்டிய கட்டாயத்தை சமூகம் வைத்திருப்பது உண்மைதான். அந்தவகையில் சம்யுக்தா வெற்றி பெற்றிருக்கிறார்.