தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் இடையே சனாதனம் தொடர்பாக மோதல் எழுந்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாநாட்டின் தலைப்பை சனாதன எதிர்ப்பு மாநாடு என்று வைக்காமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று வைத்துள்ளனர்.. சில விஷயங்களை எதிர்க்க முடியாது.. நாம் ஒழிக்கத்தான் வேண்டும். கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை நாம் எதிர்க்கக் கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அதுபோலத் தான் சனாதனம். சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்யும் முதல் காரியம்… சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானதுதான் சனாதனம்” என்று கூறியிருந்தார். அப்போது அது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நீங்கள்தான் அழிந்து போவீர்கள்
சுமார் ஓராண்டு முடிந்த நிலையில், இந்த சர்ச்சை இப்போது மீண்டும் எழுந்துள்ளது. திருப்பதில் நடந்த ஒரு பேரணியில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “இங்கே நிறைய தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தமிழிலேயே சொல்கிறேன். சனாதனம் என்பது ஒரு வைரஸ் மாதிரி. அதை நாசம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களால் சனாதன தர்மத்தை அழிக்கமுடியாது. சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழித்து போவீர்கள். உங்களைப் போல நிறைய பேர் வந்து போய்விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது.
சனாதன தர்மத்தின் மீதான தாக்குதலை யாரும் ஒருபோதும் கண்டிப்பதில்லை. யாரும் கண்டிக்காவிட்டாலும் தவறு எப்போதும் தவறுதான். நீங்கள் அரசியல்ரீதியாக சரியாக இருக்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் உண்மையை பேச விரும்புகிறேன். மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல. அது இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும்.
சனாதன தர்மத்தை காப்பேன்
மதச்சார்பின்மைவாதிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்ளும் சிலர் எனது சனாதன தர்மத்தை கேலி செய்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். என் உயிரே போனாலும் நான் சனாதன தர்மத்தை காப்பேன். எனது வாழ்க்கை, எனது பதவி உட்பட அனைத்தையும் நான் இழக்க நேரிட்டாலும், அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
சனாதன இந்துவாக நான் எடுத்துக்கொண்ட சத்தியம் இதுதான். நமது நாட்டில் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் கடுமையாக நடத்தப்படுகிறார்கள். இந்து மதத்தை விமர்சிப்போரிடம் நீதிமன்றங்கள் மென்மையாக நடந்து கொள்கின்றன. சனாதன தர்மத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் இல்லை. அதேநேரம் மற்ற மதங்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்கள் சொன்னால் மட்டும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறது” என்று பேசியுள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இப்படி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை குறிவைத்தே அவர் பேசியதாக தெளிவாக தெரிகிறது.