தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார். ஆவடி நாசர், கோ.வி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். மேலும் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம்தென்னரசு, மெய்யநாதன், கயல்விழி, மதிவேந்தன், ராஜகண்ணப்பன் ஆகியோரின் இலாகாக்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது, மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் தான். மேலும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதும் பேசுபொருளாகியுள்ளது. என்ன காரணம்?
பொன்முடி இலாகா மாற்றம் ஏன்?
“ஆளுநருடன் இணக்கமாகச் செயல்படாததால், பொன்முடியிடம் இருந்த உயர் கல்வித்துறை பறிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வனத்துறை தரப்பட்டுள்ளது. பாஜகவை சமாதானம் செய்யவும் இந்த பதவி பறிப்பு நடந்துள்ளது” என்று கூறப்படுகிறது.
சட்டசபையில் ஆளுநர் வெளிநடப்பு செய்த போது, அவரை, ‘வெளியில் போ’ என்று கூறியவர் பொன்முடி. அவர் தொடர்ந்து, ஆளுநரை ஒருமையில் விமர்சித்து வந்தார். “உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிகழ்வது உயர்கல்வி துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும்” என, முதல்வரிடம் சில கல்வியாளர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது. தற்போது, பல பல்கலைகள் நிதி இல்லாமல் சிரமப்படுவதும் துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘இதே நிலை நீடித்தால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்; கல்வி தரம் குறையும் என்பதால், ஆளுநருடன் சுமூக நிலையை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதனால் தான், பொன்முடியிடம் இருந்து, உயர்கல்வி துறை பறிக்கப்பட்டு, அவர் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்’ என்று திமுக கட்சி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
இதுபோல் அமைச்சர் கயல்விழியிடமிருந்து ஆதி திராவிடர் நலத்துறை பறிக்கப்பட்டு, மனிதவள மேலாண்மை துறை வழங்கப்பட்டு உள்ளது. “துறையில், இவரது கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாக, புகார் எழுந்ததால், அவருக்கு துறை மாற்றப்பட்டுள்ளது” என சொல்கிறார்கள்.
மனோ தங்கராஜ் பதவி பறிப்புக்கு இதுதான் காரணமா?
அமைச்சரவை மாற்றத்தில் பொன்முடி இலாகா மாற்றத்துக்கு அடுத்ததாக பேசப்படுவது மனோ தங்கராஜ் பதவி பறிப்பு.
பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பதவி மனோ தங்கராஜ்க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ் திராவிட சித்தாந்தத்தில் பற்றுள்ளவர். பாஜகவை எதிர்ப்பதில் முனைப்பு காட்டியவர். சமூக வலைதளங்களில், பா.ஜ.கவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதேநேரம், ‘அதில், கவனம் செலுத்திய அளவுக்கு, தன் வசமிருந்த பால் வளத்துறையின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லை. பால்வளத்துறையை நாசரைப் போலவே இவரும் நாசப்படுத்தி ஆவினில் உள்ள ஊழல் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி வசூல் வேட்டையாடினார் மனோ தங்கராஜ். பால்வளத்துறை, தொழில் வளர்ச்சித் துறை ஆகியவற்றில் ஊழல் முறைகேடுகளில் திளைத்தார். மாவட்டத்தில் கட்சியினரை அரவணைத்து செல்லவில்லை. நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டார்.
எதிர்கட்சியாக இருக்கும் வரை நெல்லை மற்றும் குமரி மாவட்ட இயற்கை வளங்களான மலைகள் சூறையாடப்படுவதை கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் நெல்லை, குமரி மாவட்ட மலைகள் விழுங்கப்படுவதில் முன்னணியில் நின்றார் . மாவட்டத்தில் கனிம வள கொள்ளைக்கு அமைச்சரே ஆதரவாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு மீதும் உரிய பதில் அளிக்கவில்லை.
ஆவின் நிறுவனத்தில் இளம் பெண் மரணம், ஆவின் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள், ஆவின் பாலில் தண்ணீர் கலக்கப்பட்டதாக சமீபத்தில் எழுந்த புகார் ஆகியவற்றில் பிரச்னையை தீர்க்கவில்லை மூடிமறைக்கதான் ஆர்வம் காட்டினார். துறையின் முக்கிய அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி, தன் இஷ்டத்திற்கு ஒப்பந்ததாரர் தேர்வில், அவரது மகன் கவனம் செலுத்தினார்.
இதை, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், நிதித்துறையின் உயர் அதிகாரி வாயிலாக, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ஆதாரபூர்வமான தகவல்கள் காரணமாக, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது’ என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தனது பதவி பறிபோனப் பிறகு இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் மனோ தங்கராஜ். அதில், “2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது. 2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மஸ்தான் ஏன் நீக்கப்பட்டார்?
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த மஸ்தான் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
‘விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது அவரது பதவி பறிப்புக்கு முக்கிய காரணம். மரக்காணம், செய்யூர் போன்ற இடங்களில் நடந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பின், அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கடி அதிகரிக்க துவங்கியது. கள்ளச்சாராய வியாபாரிக்கு அமைச்சர் மஸ்தான், ‘கேக் ஊட்டி விடும் போட்டோ’வை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கள்ளச்சாராய வியாபாரியுடன், மஸ்தான் குடும்பத்திற்கு இருந்த நெருக்கம்; கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் குடும்பத்தினர் தலையீடு; அ.தி.மு.க.,வினருக்கு அரசு வேலைகள் ஒதுக்கியது ஆகியவற்றை, அதிருப்தியாளர்கள், கட்சியின் தலைமை கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இறால் பண்ணையில் பெருமளவு முதலீடு செய்திருப்பதும், தலைமையின் கவனத்திற்கு சென்றது. அதைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன், அவரிடம் இருந்த மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது, அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது” என்று சொல்லப்படுகிறது.
சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த மஸ்தான் நீக்கப்பட்டதால், ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நாசருக்கு, மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார். அவர் சிறுபான்மையின நலத்துறை அமைச்சராகி உள்ளார்.
ராமச்சந்திரன் நீக்கம்?
“சுற்றுலா துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன், துறையில் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கட்சியினருடனும் சுமூக உறவு இல்லை. இதன் காரணமாக அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது” என்று திமுகவினர் சொல்கிறார்கள்.