மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களில் ஒன்று நிலா. கவினர்களில் நிலாவைப் பற்றி பாடல் எழுதாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஒரு நிலா இருக்கும்போதே அந்த நிலவை தங்கள் காதலியின் முகத்துடன் ஒப்பிட்டு பல கவிஞர்கள் கவிதைகளை எழுதி இருக்கிறார்கள். ஒரு நிலாவே மக்களை கவரும் நிலையில் நாளை முதல் 2 நாட்களுக்கு 2 நிலவுகள் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலவு என்றால்… அது நிலவு அல்ல. நிலாவைப் போன்று பெரிதான ஒரு சிறுகோள் (Asteroid). அது நாளை முதல் 2 மாதங்களுக்கு புவி வட்டப் பாதையில் சுற்றிவரும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. இந்த இரண்டாம் நிலா சற்று மங்கலாக இருக்கும் என்பதால் தொலைநோக்கி மூலம் மட்டுமே அதைப் பார்க்க முடியும் என்று கூறப்ப்படுகிறது.
விஞ்ஞானிகள் இந்த இரண்டாம் நிலவை (சிறுகோள்) ‘2024 PT5’ எனக் குறிப்பிடுகின்றனர். இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது.
அர்ஜுனா பெல்ட் பூமியின் சுற்றுப்பாதையை ஒத்த பாறைகளைக் கொண்டுள்ளது. எப்போதாவது, இந்தச் சிறுகோள்களில் சில, நமது கிரகத்திற்கு அருகே, 28 லட்சம் மைல்கள் (45 லட்சம் கி.மீ.) தொலைவில் நெருங்கி வருகின்றன. ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களின் கருத்துபடி 2024 PT5 போன்ற ஒரு சிறுகோள் சுமார் மணிக்கு 3,540 கி.மீ என்ற மெதுவான வேகத்தில் (ஒப்பீட்டளவில்) நகர்ந்தால், பூமியின் ஈர்ப்புப் புலம் அதன் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்தும். அதன் விளைவாகத் தற்காலிகமாக பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும்.
இந்த நிகழ்வு, நாளை (செப் 29) தொடங்கி, நவம்பர் 25-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
2024 PT5 சிறுகோள் தோராயமாக 32 அடி (10மீ) நீளம் கொண்டது. இது பூமியின் நிரந்தரமான நிலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது.
இந்தச் சிறுகோள் அளவில் மிகச்சிறியது என்பதாலும், மங்கலான பாறையால் ஆனது என்பதாலும் வீட்டில் இருக்கும் சாதாரண தொலைநோக்கியைப் பயன்படுத்தி பூமியில் இருந்து பார்க்க முடியாது.