No menu items!

பிரதமர் மோடியுடன் முதல்வர் சந்திப்பு – கல்வித் துறைக்கு நிதி கோரினார்

பிரதமர் மோடியுடன் முதல்வர் சந்திப்பு – கல்வித் துறைக்கு நிதி கோரினார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சவுத் பிளாக்கில் நடந்த இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, சமக்ர சிக்‌ஷ அபியான் என்ற மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்தார்.

பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

வழக்கமாக 15 நிமிடம் ஒதுக்கும் பிரதமர் மோடி, இன்று 45 நிமிடங்கள் நேரம் கொடுத்தார். 3 முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினேன். மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன். இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கும்படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.

கச்சத்தீவை தி.மு.க. தாரைவார்த்ததாக கூறுவது தவறு. கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நான் ஒரு முதல்வராக பிரதமரை சந்தித்தேன். அவர் ஒரு பிரதமராக கோரிக்கைகளை கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக நேற்று இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதல்வரை, டி.ஆர்.பாலு எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, இரவு டெல்லியில் தங்கிய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

சோனியா காந்தியுடன் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்தித்து பேசினார். அப்போது திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 5.15 மணியளவில் விமானம் மூலம், மு.க ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...