தஞ்சாவூரில் இருக்கும் தங்கள் பரம்பரை வீட்டை நிர்பந்தங்களால் எழுதிக் கொடுத்து விட்டு பிழைப்பு தேடி சென்னை வருகிறது ஜெயப்பிரகாஷ் குடும்பம். அரவிந்த் சுவாமி இளைஞராக வீட்டையும், சொந்தந்தங்களையும் பிரிய மனமில்லாமல் அழுதபடி வீட்டை விட்டு கிளம்புகிறார். பல ஆண்டுகள் கழித்து தங்கை உறவு முறை திருமணத்திற்கு தஞ்சை வருகிறார் அரவிந்த் சுவாமி.
பல ஆண்டுகளாக பிரிந்த உறவுகளும் நட்புகளும் அவரை வரவேற்கிறது. அங்கு கார்த்தியும் அத்தான் என்று வாய் நிறைய அழைத்து அவருக்கு அறிமுகமாகிறார். அவர் வாழ்க்கையில் இதுநாள் வரை மறைந்து கிடைந்த பல அழகான விஷயங்களையும், உணர்வுகளையும் மீட்டெடுக்கிறார் கார்த்தி. தொண தொண என்று பேசிப்பேசியே பதிய வைக்கும் கார்த்தியை அவ்வளவு எளிதாக மறக்க முடியாமல் தவிக்கிறார். ஆனால் அவர் கார்த்தியை பற்றி எடை போட்ட தவறான நினைப்புக்கு அவரிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறார். அது நடந்ததா ? கார்த்தி யார் ? என்பதை உணர்ச்சிப் பொங்கும் திரைக்கதையில் பிரமிக்க வைத்து சொல்லியிருக்கிறார் பிரேம்குமார்.
அப்பாவுடன் தஞ்சாவூர் வீட்டைப் பிரிந்து செல்லும் அரவிந்த் சுவாமி அழுது கலங்கும் முதல் காட்சியிலிருந்து நம்மை படம் முழுவதும் கண்ணீர் மல்க வைத்து அழைத்துச் செல்கிறார் இயக்குனர். எல்லோர் வாழ்க்கையில் தவற விட்ட சின்னச்சின்ன சம்பவங்களையும், பொருட்களையும் நினைவுபடுத்தி கதையோடு அனைவரையும் இஅனித்திருப்பதுதான் இயக்குனரின் மிகப்பெரிய வெற்றியாக அமைகிறது. அரவிந்த் சுவாமி இதனை அழகாக நம்மிடம் உணர்ச்சிப் பொங்கும் நட்ப்பின் மூலம் கடத்துகிறார்.
கார்த்தி மாதிரியான சில் கதாபாத்திரங்களை நாம் அவரவர் கிராமங்களில் அவரவர் உறவுகள் மத்தியில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. எளிதாக நம்முள் புகுந்து விடும் அந்த நபர்களை நம்மால் எளிதாக மறக்க முடியாமல் போய்விடும். அப்படி ஒரு ஆள் கார்த்தி. 40 நிமிடங்களுக்கு தன் வாழ்க்கை, சமூகம், நம்மிடம் இருக்கும் வரலாற்றுப் பெருமை எல்லாவற்றையும் வார்த்தைகளாக கார்த்தி சொல்லும்போது நமக்கு சிலிர்த்துப் போகிறது. இப்படி உரையாடல்கள் மூலம் பிரமிக்க வைத்த முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்.
படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் நம்மை ஆட்சி செய்கின்றன. ராஜ்கிரண் அமைதியான நடிப்பில் அசத்துகிறார். சென்னையில் உட்கார்ந்து கொண்டு போனில் பேசிவிட்டு ஊர் நினைவு வந்து குலுங்கி அழும் ஜெயப்பிரகாஷை கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. அடடா.. என்ன உணர்வு அது.
நான் உன்னையே கட்டியிருக்கலாம் என்று அந்தப் பெண் அரவிந்த் சுவாமிடம் சொல்லும் அழகில் அவ்வளவு புனிதம்.
அவர் அப்படித்தாண்ணே பொருத்துக்கோங்க.. என்று பாசத்தைக் கொட்டும் ஸ்ரீதிவ்யா
உன் கல்யாணத்தில் என்ன பண்ணினேன்னு சொல்லவா என இனிப்புக் கொடுக்கு சமையல்காரர் இளவரசு
பக்கத்துல வந்து உடகாருகங்கண்ணே என்று குளிக்காத அரவிந்த் சுவாமி நெற்றியில் குங்குமம் வைக்கும் பூக்கார பெண் பாத்திரம்
அடுத்த போன் வாங்கும் வரை சார்ஜ் நிக்கும் என்று லந்து பண்ணும் முகம் தெரியா வேலைக்காரர் என்று அனைவரும் கிராமத்து குடும்பமாக வாழும் அந்த வாழ்க்கை இப்போதும் இருக்கிறது என்பதை பிழைக்க வெளியூர் சென்றவர்களுக்கு சொல்லும் படம்.
இயக்குனர் பிரேம் குமார் தான் இழந்த வாழ்க்கையையெல்லாம் அப்படியே பதிவு செய்திருக்கிறார்.
கார்த்தி சொல்லும் பாண்டியன் சோழர்கள் போர் காட்சி தூத்துக்குடி கலவரத்தில் இறந்தவர்களை நினைவுபடுத்தும் காட்சிகள் மூலம் நம்மை தட்டியெழுப்பிருக்கிறார்.
கதையில் எந்த திருப்பங்களோ, சஸ்பென்ஸ் எதுவுமே இல்லாமல் நம்மை கதை கேட்க வைத்திருக்கும் இயக்குனரின் தைரியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
கதைக்கு எந்த இடத்தில் இசை வேண்டும் என்பதில் அதிகம் கவனம் எடுத்து நம்மை மெதுவாக அழைத்துச் செல்லும் கோவிந்த் வசந்தா அன்புக்குரியவர்.
மகேந்திரன் ஜெயராஜ் தஞ்சாவுரின் இரவு அழகைக் காட்டி அசத்துகிறார். கோவிந்தராஜுவின் படத்தொகுப்பு படத்திற்கு பெரிய பலம்.