தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக சில நாட்களுக்கு முன் அவசரகூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் போடப்பட்டிருக்கிறது. அதன்படி திரயரங்கில் குறைந்த பட்ச கட்டணத்தை உயர்த்த இருப்பதாக முடிவெடுக்கப்படிருக்கிறது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
திரைப்படங்களை ஓடிடி யில் கீழ்கண்ட முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படம் 8 வாரம் கழித்தும், அதுக்கு அடுத்து வரிசையில் உள்ள நடிகர்களில் படம் 6 வாரங்கள் கழித்தும் OTT யில் திரை இடும்படி கேட்டுக்கொள்கிறோம். தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் திரையிடப்பட வேண்டும். சில மாநிலங்களில் முன்னதாக திரையிடப்படுவதால் தமிழகத்தில் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10% வசூலிக்க அனுமதி தர வேண்டுகிறோம். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 வரையும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 வரையும், சாதாரண திரையரங்குகளுக்கு ரூ. 150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும் நம் பக்கத்து மாநிலங்களில் உள்ளபடி 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதுபோல் தமிழ்நாட்டிலும் இது போன்ற அனுமதிகள் வழங்கப்பட வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சி தான் திரையிட வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லாமல் திரையிட அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.
இதோடு இன்னும் சில கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது உள்ள நிலவரப்படி குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு மல்ப்ளக்ஸ் தியேட்டர்களில் பெரும்பாலும் திரைகள் ஒதுக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் பல காலமாகவே இருந்து வருகிறது. அதோடு பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் வரும் நாட்களில் சிறிய படங்களை வெளியிட அனுமதிக்கக்கூடாது. அதே போல் சிறிய திரைப்படங்கள் ஓட ஆரம்பிக்கும் போது பெரிய பட்ஜெட் படங்களை வெளியிட அனுமதிக்ககூடாது என்கிற கோரிக்கையும் சில தயாரிப்பாளர்கள் எழுப்பி வருகிறார்கள். இதனையும் திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருக்கும் நேரத்தில் இப்படியான கோரிக்கைகள் வைத்தால்தான் அது நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார்கள். இப்போது இருக்கும் சூழலில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதே இல்லை. இதில் டிக்கெட்டின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் இன்னும் மோசமான சூழலை ஏற்படுத்துமே ? என்பதும் சிலரின் கேள்வியாக இருக்கிறது. இதனை எப்படி சரி செய்வது என்பதற்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் இணைந்து முடிவு எடுப்பார்கள் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சிலர்.