No menu items!

தங்கமா?  தங்க பத்திரமா? – என்ன வாங்கலாம்?

தங்கமா?  தங்க பத்திரமா? – என்ன வாங்கலாம்?

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் 7060 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் 56480  ரூபாய்க்கு விற்பனையாகிறது. “தங்கம் ஒரு சிறந்த முதலீடு; ஒருவர் தனது மொத்த சொத்து மதிப்பில் 20 சதவிகிதத்தை தங்கமாக வைத்துக்கொள்வது நல்லது” என்கிறார் பிரபல முதலீட்டு ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். தங்கம் வாங்க இது சரியான நேரமா? தங்கம் – தங்கப் பத்திரம் இரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது?

தங்கம் வாங்க இது சரியான நேரமா?

“நிச்சயம் இது சரியான நேரம்தான். 22 கேரட் தங்கம் சென்னையில் மட்டுமல்ல இந்தியாவில் பல நகரங்களிலும் ரூ. 7000ஐ தாண்டிவிட்டது. வரும் நாட்களில் தங்கம் விலை குறைந்தது 15% அதிகரிக்கப் போகிறது. விலை குறைய வாய்ப்பு மிக குறைவு. அமெரிக்க மத்திய வங்கி கடந்த வாரம் அங்கு வட்டி விகிதத்தை 0.5% குறைத்தது. இதுவே தங்கம் விலை உயரக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது தவிர இஸ்ரேல், லெபனான் இடையே தாக்குதல் உச்சம் தொட்டுள்ளது. இந்த சர்வதேச போர் பதற்றமும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது” என்று ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சரி, தங்கத்துக்கும் அமெரிக்க டாலருக்கும் என்ன தொடர்பு?

இந்தியாவில் கடந்த காலங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தங்கத்தின் விலையில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்துவதை பார்த்திருக்கிறோம். இதற்கு என்ன காரணம்? இது தொடர்பாக பேசிய முதலீட்டு ஆலோசகர் சதீஷ், “சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரில் தான் தங்கம் விலை மதிப்பிடப்படுகிறது. எனவே, சந்தையில் தங்கம் விலையானது, அமெரிக்க டாலருடன் நேர்மாறான விகிதாச்சார தொடர்பை கொண்டுள்ளது. இதனால்தான், அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தால் தங்கம் விலை குறைகிறது; அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கிறது” என்கிறார்.

தொடர்ந்து நீண்ட கால முதலீட்டுக்கு தங்கம் ஏன் சிறந்தது என்பது பற்றி பேசும் சதீஷ், “ஒருவேளை தங்கத்தின் விலை குறைந்தாலும், அது மிகக் குறுகிய காலத்திற்குதான் மாறக்கூடியதாக இருக்கலாம். ஆனால், மிக நீண்ட காலத்தில் அதன் மதிப்பு எப்போதுமே அதிகரித்திருக்கும். எத்தனையோ ஆண்டுகளாக பண வீக்கத்துக்கும், நாணய மதிப்பு குறைதலுக்கும் எதிரான சிறந்த பாதுகாப்பாக இருப்பது தங்கம் தான். எனவே அதனை முதலீடாக செய்வது பற்றி தற்போது யோசிப்பது நல்ல ஒரு மதிப்பையை ஈட்டி தரும்.

அதேநேரம் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்கமாக இல்லாமல் தங்கப் பத்திரமாக வாங்கி வைத்துக்கொள்ளலாம்” என்கிறார் சதீஷ்.

தங்க பத்திரம் என்றால் என்ன?

தங்கத்தை ஃபிசிகல் முறையில் ஒரு ஆபரணமாகவோ நாணயமாகவோ  கட்டியாகவோ வைத்துக் கொள்வதற்கு பதில் தங்க பத்திரமாக வாங்கிக் கொள்ளலாம் என இந்திய அரசாங்கம் 2015 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. முதலீட்டாளர்கள் வங்கிகளிலோ பங்குச்சந்தை இணையதளங்களிலோ பணமாகவோ, செக், டிடி, மின்னணு பண பரிவர்த்தனை உள்ளிட்டவற்றின் மூலமும் தங்க பத்திரத்தை வாங்க முடியும்.

ஒரு கிராம் தங்கப் பத்திரம் ஒருவர் வாங்குகிறார் என்றால் 8 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பில் அவர் அந்த பத்திரத்தின் மதிப்புக்கு ஈடான தூய தங்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக, 2015ஆம் ஆண்டு 24 கேரட் தூய்மையான தங்கத்தை ஒரு கிராம் தங்க பத்திரமாக ரூ.2,634 கொடுத்து ஒருவர் வாங்கி இருக்கிறார் என்றால், இன்றைய ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் மதிப்புபடி ரூ. 7413 பெறுவார். இதனுடன், முதலீடு செய்து 5 ஆண்டுகள் கழித்து அதற்கான நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வட்டியாக 2.50% வட்டியும் கிடைக்கும். இது தங்கத்தை கட்டியாகவோ நகையாகவோ வாங்கும்போது கிடைக்காது.

மேலும், தங்கத்தை ஆபரணமாகவோ நாணயமாகவோ கட்டியாகவோ வீட்டிலோ வைத்திருக்கும் போது அச்சம் எழலாம். நிம்மதியாக ஒரு உறவினர் வீட்டின் விசேஷ நிகழ்ச்சிக்குக் கூட சென்று வர முடியாது. என்னதான் சிசிடிவி வைத்து கண்காணித்தாலும், அது திருடன் எந்த உருவில் வந்து திருடிச் சென்றான் என்றே காட்டித் தருமே தவிர திருட்டைத் தடுக்க முடியாது.

தங்கத்தை ஒரு சிறந்த முதலீடு வாய்ப்பாக கருதும் பலரும் அதை யார் பாதுகாப்பது என்ற அச்சத்தினால் கூட அதன் மீது முதலீடு செய்வதை தவிர்ப்பதும் உண்டு. வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் அதற்கு ஆண்டுக்கு ஒரு கணிசமான தொகையை லாக்கர் வாடகையாக கொடுக்க வேண்டி வரும்.

ஆனால், தங்க பத்திரத்தை பொருத்தவரை அதைத் திருடினால்கூட நீங்களே சென்று கையெழுத்திட்டால்தான் அந்த தங்க பத்திரத்தை வாங்கவோ, விற்கவோ, பிறருக்கு கைமாற்றவோ அல்லது வங்கிகளில் அடகு வைத்து பணத்தையோ பெற முடியும். எனவே பாதுகாப்புக்கு தங்கப் பத்திரம் சிறந்த தேர்வாக இருக்கும். எனவே தான் ரிசர்வ் வங்கி நீங்கள் தங்கத்தை ஒரு முதலீட்டு வாய்ப்பாக கருதுகிறீர்கள் என்றால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தங்கத்தை நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என பல இழப்புகள். இதனால், நாம் வாங்கும் தங்கத்தின் மதிப்பைவிட கூடுதலாக செலுத்திதான் வாங்க வேண்டியதிருக்கும். நாணயமாக வாங்கினாலும் சேதாரம், ஜிஎஸ்டி இருக்கும். வாங்கும்போது இதுபோல் கூடுதல் பணம் கொடுத்து வாங்குகிறோம் என்றால் விற்கும்போதும் இதுபோல் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி கழித்து அன்றைய மதிப்பைவிட குறைவாகத்தான் நமக்கு கிடைக்கும்.

ஆனால், தங்கப்பத்திரம் வாங்கும்போது செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, ஜிஎஸ்டி வரி இல்லை; மேலும், வருமான வரிவிலக்கு சலுகையும் உண்டு. 5 ஆண்டுகளுக்குப் பின் ஆண்டுக்கு 2.50% வட்டி வருவாயும் கிடைக்கும்.

தனிநபர் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கிக் கொள்ளலாம். டிரஸ்ட் போன்ற அரசால் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் 20 கிலோ வரை தங்கப்பத்திரம் வாங்கிக் கொள்ளலாம். சாதாரண தங்கத்தைப் போன்றே இதை விற்கலாம், வங்கிகளில் அடகும் வைக்கலாம். கைமாற்றவும் செய்யலாம். தங்க பத்திரமாக வாங்கும்போது வரி விலக்கும் உண்டு என்பதால் இது சிறப்பு அம்சம் தான்” என்கிறார் சதீஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...