முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வழக்கறிஞர் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
நிபந்தனைகள் என்ன?
செந்தில்பாலாஜியை ஜாமீனில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள் வருமாறு..
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது.
ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும்.
விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது.
திமுகவினர் கொண்டாட்டம்
செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மற்றும் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் திமுக நிர்வாகிகள் சாலைகளில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்ததை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட்டால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத்துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஒன்றே விடியலாக இருக்கிறது.
மர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” என்று குறிப்பிட்டுள்ளார்.