தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7000ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுக்கு என்ன காரணம்? தங்கம் சிறந்த முதலீடா?
இது தொடர்பாக பிரபல நிதி ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சொல்லும் போது, “22 கேரட் தங்கம் இந்தியாவில் பல நகரங்களில் ரூ. 7000ஐ தாண்டிவிட்டது. சென்னையிலும் கூட உச்சம் தொட்டுவிட்டது. தங்கத்தை அனைவரும் தைரியமாக வாங்கலாம். நிச்சயம் ஏறப் போகிறது. தங்கம் விலை குறைந்தது 15% அதிகரிக்கப் போகிறது.
சில மாதங்களுக்கு முன்பே தங்கம் விலை ரூ.7000ஐ நெருங்கியது. அப்போது தான் மத்திய அரசு இறக்குமதி வரியை ரத்து செய்தார்கள். இதனால் தங்கம் விலை குறைந்தது. ஆனால், இப்போது மீண்டும் உயர்ந்து அதே நிலைக்கு வந்துவிட்டது. மத்திய அரசு இறக்குமதி வரியைக் குறைத்தது 2 மாதங்கள் கூட தாங்கவில்லை என்பதே உண்மை.
மத்திய அரசு நினைத்தால் இன்னும் 6% வரை இறக்குமதி வரியைக் குறைக்கலாம். அப்படிச் செய்தால் ரூ.100 அல்லது ரூ.200 குறையும். அதுவும் மளமளவென உயர்ந்துவிடும். ஆனால், அதன் பிறகு வரி குறைக்க முடியாது.
இப்போது தங்கம் விலை ரூ.7000இல் இருக்கிறது. இத்துடன் நீங்கள் ஜிஎஸ்டி 3% மற்றும் செய்கூலி சேதாரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போ தங்கம் விலை எங்கு இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். தங்கம் மிக மிக வலுவாக இருக்கிறது. விலை குறைய வாய்ப்பு குறைவு.
இந்தியாவில் முதல்முறையாகத் தங்கம் விலை ரூ.7000ஐ தாண்டி இருக்கிறது. வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் உயர்ந்துள்ளது. இறக்குமதி வரி குறைப்பை எல்லாம் மார்கெட்டே சாப்பிட்டுவிட்டது. அந்த இறக்குமதி வரி குறைப்பு இல்லை என்றால் தங்கம் விலை ரூ.7300இல் இருந்து இருக்கும். இதன் பிறகும் தங்கம் விலை நிச்சயம் அதிகரிக்கவே செய்யும். இதனால் இன்னொரு நல்ல விஷயமும் இருக்கிறது. தங்கம் விலை உயர்வதால் தங்க நகைக் கடன் நிறுவனங்கள் அதிக லோனை தர முடியும்” என்றார்.
மேலும், “அமெரிக்க மத்திய வங்கி கடந்த வாரம் அங்கு வட்டி விகிதத்தை 0.5% குறைத்தது. இதுவே தங்கம் விலை உயரக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தங்கம் விலை என்பது அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தைப் பொறுத்து மாறுபடும். அமெரிக்கா தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இது தவிர இஸ்ரேல், லெபனான் இடையே தாக்குதல் உச்சம் தொட்டுள்ளது. இந்த சர்வதேச போர் பதற்றமும் தங்கம் விலை உயரக் காரணமாக இருக்கிறது” என்றும் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.