No menu items!

சென்னை கார்ப்பரேஷனில் லிப்ஸ்டிக் பிரச்சினை! – என்ன நடந்தது?

சென்னை கார்ப்பரேஷனில் லிப்ஸ்டிக் பிரச்சினை! – என்ன நடந்தது?

லிப்ஸ்டிக்  போட்டுக்கொண்டு பணிக்குச் சென்றதால், தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக சென்னை மேயர் அலுவலகத்தில் தபேதாராக பணியாற்றிய மாதவி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மேயர் ப்ரியாவின் அலுவலகத்தில் தபேதாராக பணியாற்றியவர் மாதவி. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான இவர்,  பணிக்கு செல்லும்போது லிப்ஸ்டிக் அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. அத்துடன் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோவில் மாதவி கலந்துகொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பளிச் நிறத்தில் லிப்ஸ்டிக் அணிந்து வரக்கூடாது என்று மேயரின் தனிப்பட்ட உதவியாளர் சிவசங்கர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்.  ஆனால் அந்த அறிவுரைக்குப் பிறகும் அவர் தொடர்ந்து உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்) பூசி வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஒரு மெமோ வழங்கப்பட்டது. அதில், “நீங்கள் வேலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை. மேலும் உங்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளையும் மதிப்பதில்லை” என்று கூறி அதற்கு விளக்கம் கோரப்பட்டிருந்தது.

அந்த மெமோவுக்கு விளக்கம் அளித்திருந்த மாதவி, “நீங்கள் என்னிடம்  உதட்டுச் சாயம் பயன்படுத்தக் கூடாது என்று கூறி இருந்தீர்கள். ஆனால் நான் அதைப் பயன்படுத்தினேன். அதனால் ஏற்பட்ட கோபத்தால் நீங்கள் எனக்கு மெமோ அனுப்பி இருக்கிறீர்கள். உதட்டுச் சாயம் பூசக்கூடாது என்ற உங்கள் உத்தரவை ஏற்க மறுத்தது குற்றம் என்றால், அலுவலகத்தில் உதட்டுச் சாயம் பூசிக்கொள்ள கூடாது என்பது தொடர்பான அரசு உத்தரவை காட்டுங்கள்” என்று கூறியிருந்தார். இந்த சூழலில் அவர் மணலி மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உதட்டுச் சாயம் பயன்படுத்தியதால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கூறும் மாதவி, தான் ஒரு நாள் மட்டுமே அலுவலகத்துக்கு தாமதமாக சென்றதாக கூறியுள்ளார். இதுபற்றி மேலும் கூறியுள்ள மாதவி, “என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பணியிடமாற்றம் செய்துவிட்டனர். நான் வசிக்கும் இடத்தில் இருந்து அருகே உள்ள அண்ணாநகர், அம்பத்தூர், வளசரபாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்யாமல் மணலிக்கு மாற்றம் செய்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

 மாதவியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மேயர் பிரியா, “மேயர் அலுவலகம் என்பது அடிக்கடி அமைச்சர்கள், தூதர அதிகாரிகள் வந்து செல்லும் இடம். இதனால் பளிச்சென்ற நிறங்களில் லிப்ஸ்டிக் அணிய வேண்டாம் என்று எனது உதவியாளர் கேட்டு கொண்டார். இருப்பினும் தற்போதைய இடமாற்றம் என்பது லிப்ஸ்டிக் பயன்படுத்தியதற்காக அல்ல” என்றர்.

 இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநகராட்சி தரப்பு அதிகாரிகள், அதிக அளவில் விடுப்பு எடுத்ததாலும், ஒழுங்காக பணிக்கு வராததாலும் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...