உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி. கிளவுட் நைன் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவந்த அவர், ‘ மங்காத்தா’, ‘ வடகறி’, ‘ தமிழ்படம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. சுயநிலைவு இல்லாமல் கிடந்த அவரை, உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
துரை தயாநிதியின் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு சிலரும், அவருக்கு brain stroke ஏற்பட்டதாக வேறு சிலரும் கருத்து தெரிவித்தனர். அவரது உடல்நிலை குறித்த முறையான அறிவிப்பு ஏதும் வரவில்லை. இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடித்த சில வாரங்களுக்கு பிறகு, வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
கடந்த மார்ச் 14-ம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதிக்கு அங்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், துரை தயாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சி.எம்.சி தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.