No menu items!

இலங்கையின் புதிய அதிபர் சீனாவுடன் நெருங்குவாரா?

இலங்கையின் புதிய அதிபர் சீனாவுடன் நெருங்குவாரா?

இலங்கையின் 9-வது அதிபராக அநுரா குமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்.

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து அந்நாட்டின் புதிய அதிபராக அநுரா குமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்.

பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுரா குமார திசநாயகேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த அனுரா குமார திசாநாயக்க?

இலங்கையின் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு பிறந்தவர் அனுரா குமார திசாநாயக்கா. இலங்கை மக்களால் ஏகேடி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அரசியலில் ஆர்வம் காட்டிய இவர், தனது 19-வது வயதில் இலங்கையின் மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்தார்.

கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. ஏகேடி 1,53,868 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அந்த ஆட்சிக்காலத்தில் அவர் விவசாயம், கால்நடைகள், காணி, நீர்பாசனத் துறை அமைச்சராக பதவியேற்றார். ஆனால், சுனாமிக்குப் பிறகு, வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா குமாரதுங்க அரசு முடிவு செய்தபோது, அதை எதிர்த்து ஜேவிபி அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். அநுரவும் பதவி விலகினார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஜேவிபியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் ஏகேடி. அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரா குமார திசாநாயக்க முதல் முறையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்த அனுரா குமாரா, இப்போது 50 சதவீத்த்துக்கும் அதிக வாக்குகளை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அனுரா குமார திசாநாயக்க தற்போது தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் அவர் தலைமை வகிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவின் கடந்த காலம் வன்முறைகள் நிறைந்தவை. கடந்த 1971-ல் பண்டாரநாயக அரசுக்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2014இல் ஜே.வி.பியின் தலைவரான பிறகு பிபிசிக்கு அளித்த பேட்டியில், அக்கட்சியின் கடந்த கால வன்முறைகளுக்காக மன்னிப்பு கோரினார் அனுரா குமார திசாநாயக்க.

தமிழர் பிரச்சினையில் அனுரா குமார திசாநாயக்கவின் பார்வை:

ஜூன் மாதத்தில் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் அநுரா. அந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர், மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் எனக் கூறினார். ஆனால், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும், ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரை, அது நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது. தற்போதைய புதிய சூழலில் அக்கட்சி என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீனாவுடன் நெருக்கம்?

ஜேவிபி ஒரு இடதுசாரி கட்சி என்பதால், அது சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. , மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையும் ஜேவிபி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த ஒப்பந்தம் இலங்கை மீது இந்தியாவால் திணிக்கப்பட்டதாகவும் கருதுகிறது.

செப்டம்பர் 16-ம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அநுரா, அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறினார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறினார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அவர் இந்தியாவைவிட சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டுவாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...