வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் – ஜடேஜா ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. வங்கதேச அணியின் கேப்டன் ஷண்டோ டாஸில் வென்றார். சென்னையில் இன்று காலை மழை பெய்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த வங்கதேச கேப்டன் ஷண்டோ, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.
ஷண்டோ நினைத்ததைப் போலவே ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களிலும், சுப்மான் கில் ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறிக்கொண்டு இருந்தது. இந்த கட்டத்தில் ஜெய்ஸ்வாலுடன் கரம் கோர்த்த ரிஷப் பந்த் அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றார்.
ரிஷப் பந்த் – ஜெய்ஸ்வால் ஜோடியின் ஆட்டத்தால் இந்திய அணி உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்களை எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு சிறிது நேரத்தில் 39 ரன்களை எடுத்து ரிஷப் பந்த் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் சேர்ந்து அணியை மீட்க ஜெய்ஸ்வால் போராடினார். ஆனால் அவரும் அரை சதம் அடித்த நிலையில் 56 ரன்களில் ஆட்டம் இழந்தார். கே.எல்.ராகுலும் 16 ரன்களில் வெளியேற இந்திய அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
ஆட்டம் இந்தியாவின் கையை விட்டு போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்ட சூழலில் ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் ஜோடி சேர்ந்தனர். பேட்ஸ்மேன்களே ஆட தடுமாறிய ஆடுகளத்தில் இருவரும் சிறப்பாக ஆடி அரைசதங்களை விளாசினர். அவர்களை அவுட் ஆக்க வங்கதேச பந்துவீச்சாளர்களால் முடியவில்லை.