No menu items!

போலீஸ் நடத்திய என்கவுண்டர் – யார் இந்த காக்காதோப்பு பாலாஜி?

போலீஸ் நடத்திய என்கவுண்டர் – யார் இந்த காக்காதோப்பு பாலாஜி?

சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி(41). பிரபல ரவுடியான இவர் மீது 5 கொலை வழக்கு, 15 கொலை முயற்சி வழக்கு, 10க்கும் மேற்பட்ட ஆட்கடத்தல் வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் தடுப்பு சட்ட்த்தின் கீழ் இவர் பலமுறை சிறைக்கு சென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரபல ரவுடி சிடி மணி வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜராகி விட்டு காரில் சென்ற போது, தேனாம்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி நடைபெற்றது. இந்த வழக்கில், காக்காதோப்பு பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த காக்காதோப்பு பாலாஜி தலைமறைவானார்.

இந்நிலையில் கொடுங்கையூர் முல்லை நகர் மேம்பாலம் பகுதியில் போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை இடைமறித்து போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர். காரின் டிக்கியை சோதனை செய்வதற்காக டிரைவர் அருகே இருந்த நபர் இறங்கி காரின் டிக்கியை திறந்துள்ளார். காரின் டிக்கியை போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தபோது கார் திடீரென புறப்பட்டு சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடனிருந்த நபரிடம் விசாரணை செய்தபோது காரில் இருந்தவர் காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்தது.

உடனடியாக அந்த காரை போலீசார் விரட்டி சென்றனர். சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதிக்கு கார் சென்றுள்ளது. போலீசார் விரட்டி வருவதை அறிந்த காக்காதோப்பு பாலாஜி காரை நிறுத்திவிட்டு புதரை நோக்கி ஓடினார். மேலும், போலீஸ் வாகனத்தை நோக்கி கள்ளத்துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார். போலீஸார் திருப்பிச் சுட்ட்தில் காக்காதோப்பு பாலாஜி உயிரிழந்துள்ளார்.

யார் இந்த காக்காதோப்பு பாலாஜி?

சிறு குழந்தைகளிடம், ‘நீங்கள் வளர்ந்து பெரியவர்களானால் என்னவாகப் போகிறீர்கள்?’ என்று கேட்டால் அவர்கள் பெரும்பாலும் டாக்டர் ஆவேன், இஞ்ஜினீயர் ஆவேன் என்று சொல்வார்கள். ஆனால் காக்காதோப்பு பாலாஜி பள்ளிக்கு செல்லும் சிறுவனாக இருந்தபோதே ரவுடியாகும் ஆசையுடன் இருந்திருக்கிறார். 9-ம் வகுப்பு வரை படித்த இவர், ஆரம்ப காலத்தில் அடி, தடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்றார். காக்கா தோப்பு பகுதியில் யுவராஜ் மற்றும் இன்பராஜ் ஆகியோர் வைப்பதுதான் எழுதப்படாத சட்டமாக இருந்தது.

அவர்களின் நட்பு பாலாஜிக்கு கிடைத்தது. மூலக்கொத்தளத்தைச் சேர்ந்த ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவைக் கொலை செய்ய யுவராஜ், இன்பராஜ், பாலாஜி ஆகியோர் ஸ்கெட்ச் போட்டனர். புஷ்பா கொலைதான் பாலாஜியின் முதல் கொலை என்கின்றனர் போலீஸார். இதையடுத்து பல வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாலாஜிக்கும் யுவராஜுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இந்தப் போட்டியில் யுவராஜ் கொலை செய்யப்பட்டார்.

அதன்பிறகு பாலாஜியின் பெயரோடு காக்கா தோப்பு அடைமொழியானது. வட சென்னையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காக்கா தோப்பு பாலாஜி திட்டமிட்டார். அதற்குத் தடையாக இருந்தவர்களை அடுத்தடுத்து காக்கா தோப்பு பாலாஜி மற்றும் அவரின் கூட்டாளிகள் கொலை செய்தனர். சில ஆண்டுகள் பிரபல ரவுடி நாகேந்திரனுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். பிறகு அவரிடமிருந்து விலகினார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸார், வழக்குகள் நிலுவையில் உள்ள காவல் நிலைய போலீஸார் என அனைத்து போலீஸாரின் பார்வையும் காக்கா தோப்பு பாலாஜி மீது விழுந்தது. சிறைக்குச் செல்வதும் பிறகு வெளியில் வருவதும் காக்கா தோப்பு பாலாஜிக்கு வழக்கமாகியது. இந்நிலையில் காக்காதோப்பு பாலாஜி இப்போது என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...