டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியின் முதல்வர் பதவியில் இருந்து இன்று மாலை விலகப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதன் காரணமாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லியில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி, அரவிந்த் கேஜ்ரிவால் சிறைக்கு சென்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமாக மாறியவர். நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் பிரதான பேச்சாளராக இருந்த இவர், ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு கூடுதல் தண்ணீரை விடுவிக்க கோரி 5 நாட்கள் வரை உண்ணாவிரதம் இருந்தவர். இதனால் டெல்லி மக்களின் அபிமானத்தைப் பெற்றதால் அவருக்கு அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவி வழங்கியுள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1981-ம் ஆண்டில் பஞ்சாபி மற்றும் ரஜபுத்திர குடும்பத்தில் பிறந்த அதிஷியின் முழுப்பெயர் அதிஷி மர்லினா சிங். மார்க்ஸ் மற்றும் லெனினின் பெயர்களை இணைத்தே அவரது பெற்றோர் மர்லினா என்று அவருக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் கடந்த 2018 முதல் சில காரணங்களால் தன் பெயரை அதிஷி என்று மட்டுமே அவர் பயன்படுத்தி வருகிறார்.
டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த அதிஷி, அங்குள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.
2013-ம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அதிஷி, மிகக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார். கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பன்ப்க்காற்றிய அவர், 2015-ம் ஆண்டில் டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். டெல்லியில் கடந்த காலங்களில் கல்வித்துறையில் ஏற்பட்ட பல நல்ல மாற்றங்களில் அதிஷிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
2019-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரபல கிரிக்கெட் வீர்ரான கவுதம் காம்பீருக்கு எதிராக போட்டியிட்ட அதிஷி, அதில் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். தேர்தலில் தோற்றாலும், அரசியலில் அதிஷியின் ஆர்வத்துக்கு குறைவு ஏற்படவில்லை. 2020 சட்டமன்ற தேர்தலில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி, 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, அதிஷிக்கு அமைச்சராக பதவி கிடைத்துள்ளது. திட்டமிடல், பொதுப்பணித் துறை, நீர், மின்சாரம், கல்வி, உயர்கல்வி, சேவைகள், மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட 11 இலாகாக்களை அதிஷி கவனித்து வருகிறார். டெல்லியில் வேறு எந்தவொரு அமைச்சரிடமும் இத்தனை இலாகாக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.