மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கு முன்னரும் மோடி அரசு 2 முறை ஆட்சியில் இருந்துள்ளது. அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வருவது இது 3-வது முறை.
ஆனால் முதல் 2 முறைகளைப் போல் அல்லாது இம்முறை கடுமையான சவால்களை மோடி அரசு சந்திக்கிறது. அதற்கு முதல் காரணம் தனிப் பெரும்பான்மை இல்லாதது. நாடாளுமன்றத்தில் இம்முறை பாஜகவுக்கு 240 எம்பிக்கள் மட்டுமே இருப்பதால், பல விஷயங்களில் அவர்கள் கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. அதனால் சில சமரசங்களையும் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.
பாஜக சொல்லும் சாதனைகள்
சமரசங்களையும், சவால்களையும் தாண்டி பல சாதனைகளை இந்த 100 நாட்களில் செய்துள்ளதாக பாஜக சொல்கிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதியின் ஒரு பகுதியாக, 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி வழங்கப்பட்டுள்ளது, 900 கிலோமீட்டருக்கு மேல் உள்ள எட்டு தேசிய அதிவேக சாலை தாழ்வார திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 76,200 கோடி செலவில் மகாராஷ்டிராவில் வாதவன் மெகா துறைமுகத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, 70 வயதை தாண்டியவர்கள் 5 லட்ச ரூபாய் வரை மருத்துவ காப்பீடு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என பல சாதனைகளை இந்த அரசு செய்துள்ளதாக பாஜகவினர் கூறுகிறார்கள்.
யு டர்ன் அரசு
அதே நேரத்தில் இந்த அரசு பல விஷயங்களில் யுடர்ன் அடித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கின்றன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் 370-வது பிரிவு மசோதாவை நீக்கியது போன்ற பல சட்டங்களை கடந்த காலகட்டங்களில் பாஜக அரசு செய்துள்ளது. ஆனால் இம்முறை அவர்களால் அப்படி செயல்பட முடியவில்லை.
இந்திய குடிமைப் பணியில் (சிவில் சர்வீஸ்) நேரடி நியமன முறையை கொண்டுவந்து, பின் அதே வேகத்தில் ரத்து செய்தது, ஒளிபரப்பு வரைவு மசோதாவை திரும்ப பெற்றது, வக்ஃப் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பியது, கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது என கடந்த 100 நாள்களில் பாஜக அரசு, பல விவகாரங்களில் யூ டர்ன் அடித்தது. பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
உள்நாட்டு பாதுகாப்பு
உள்நாட்டு பாதுகாப்பைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தும் அளவுக்கு நிலைமையை மேம்படுத்தியதை ஒரு சாதனையாக பாஜக சொல்கிறது. அதேநேரத்தில் மணிப்பூரில் முன்பு இருந்ததை விட இப்போது நிலைமை மோசமாகி இருக்கிறது. ட்ரோன்களை வைத்து கூண்டு வெடிப்புகளை நிகழ்த்தும் அளவுக்கு அங்கு வகுப்புவாதம் தலைவிரித்து ஆடுகிறது. இத்தனை நடந்தும் அம்மாநிலத்திற்கு பிரதமர் செல்லாததை எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சினையாக பார்க்கின்றன.
வெளியுறவுக் கொள்கை
இம்முறை பதவிக்கு வந்த 100 நாட்களுக்குள் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு பிரதமர் பயணம் மேற்கொண்ட்து ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ரஷ்ய பயணத்தின்போது அந்நாட்டு ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருந்த இந்தியர்களை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்தார். அடுத்ததாக உக்ரைன் சென்ற அவர், அங்கும் பல சந்திப்புகளை நட்த்தினார். உக்ரைன் ரஷ்யா போரையே இந்தியா நினைத்தால் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்ற இமேஜை ஏற்படுத்தினார். ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியான ஒரு வீடியோ அதை சுக்குநூறாக்கியது. அந்த வீடியோவில் ரஷ்ய அதிபர் புடுன் முன்பு சீட் நுனியில் பம்மி அமர்ந்தபடி, பிரதமரின் உக்ரைன் பயணத்துக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல். இது இந்தியாவின் இமேஜை தகர்த்த்து.
வங்கதேசத்தில் இருந்த இந்தியாவுக்கு நெருக்கமான ஷேக் ஹசீனா அரசை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கவில்லை. அந்நாட்டில் தற்போது அமைந்துள்ள அரசு இந்தியாவுக்கு நெருக்கமானதாக இல்லை. அதேபோல் இலங்கையிலும் இந்தியாவின் பிடி தளர்ந்து வருகிறது. இதுவரை அங்கு நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் இரட்டை இலக்கங்களை எட்ட போராடிக்கொண்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் வேட்பாளர் அங்கு ஆட்சியைப் பிடிக்கும் நிலை உள்ளது. ஜனதா விமுக்தி பெரமுனா மார்க்சிய சித்தாந்தங்களைக் கொண்ட கட்சி. அதனால் ஆவர்கள் ஆட்சி அமைத்தால் அதே கொள்கைகளை கொண்ட சீனாவுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது. இப்படி 2 பகுதிகளில் இந்தியாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தமிழகத்துக்கு பலன் இருந்ததா?
பாஜகவின் இந்த 100 நாள் ஆட்சியில் அதிகம் பலன் பெற்றது பீஹார் மற்றும் ஆந்திர மாநிலங்கள்தான். அம்மாநிலங்களுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த மத்திய அரசு, தமிழகத்துக்கு கிள்ளிக்கூட கொடுக்கவில்லை என்பது மாநில அரசின் குற்ரச்சாட்டு. மாநில அரசின் பல திட்டங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை. குறிப்பாக சென்னையின் முக்கிய திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கவில்லை என்று மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேராத்தால், தமிழக கல்வித்துறைக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு பிடிவாதம் காட்டி வருகிறது.
ஆனால் கடந்த கால அரசுகளைவிட அதிக நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கி இருப்பதாக கூறும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கடன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதாக சொல்கிறார்.