‘ஓணம் விருந்து’ என்ற பெயரில் 700 முதல் 1,500 ரூபாய் வரையிலான சாப்பாட்டு மெனுக்களை பல்வேறு ஓட்டல்களும் விளம்பரப்படுத்தி வருகின்றன. இதற்கு நடுவே வித்தியாசமான ஒரு மதிய உணவை சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா அறிவித்திருந்தது. வரும் 14-ம் தேதி ஒரு நாள் மட்டுமே இந்த உணவு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த ஒரு நாள் மதிய விருந்தின் விலை என்ன தெரியுமா?… ஜஸ்ட் 35,000 ரூபாய்.
ஒரு நாள் மதிய உணவுக்கு இத்தனை கட்டணமா என்று கேட்கிறீர்களா?… இந்த கட்டணம் உணவுக்கானது அல்ல. அதை சமைக்கும் செஃப்புக்கானது. தாய்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல்கலை நிபுணரான ‘திதிட் டான் டஸ்ன்னகஜோன்’ இந்த உணவைச் சமைக்கிறார். தாய்லாந்தைச் சேர்ந்த உலகின் முன்னணி சமையல்காரரான டான், இப்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரது கைப்பக்குவத்தை ருசிக்கும் விதமாக சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாய்லாந்தைச் சேர்ந்த திதிட் டான் டஸ்ன்னகஜோன், தனது தாய் மற்றும் தாத்தா – பாட்டியிடம் இருந்து சமையல் கலையை கற்றுள்ளார். அவர்கள் சமையல் கற்றுக் கொடுக்கும்போது டானுக்கு விதித்த நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். எக்காரணத்தைக் கொண்டும் ஓட்டல் தொழிலில் ஈடுபடக் கூடாது என்பதே அந்த நிபந்தனை.
முதலில் பெற்றோரின் நிபந்தனைக்கு கட்டுப்பட்ட டான், படித்து முடித்து இன்வெஸ்ட்மெண்ட் பாங்கராக பணியாற்றினார். ஆனால் அந்த வேலையில் சேர்ந்த ஒரு மாத்த்திலேயே அவருக்கு போரடித்துப் போனது. தனக்கு ஏற்றது ஓட்டல் தொழில்தான் என்பதை உணர்ந்து அந்த வேலையை உதறினார். ஹாஸ்பிடாலிடி பிரிவில் எம்பிஏ படித்தவர், உலகின் பிரபல ஓட்டல்கள் பலவற்றிலும் வேலை பார்த்தார்.
“நமக்கு பிடித்தவர்களின் மகிழ்ச்சிக்காகவும், அவர்கள்ளின் நலனுக்காகவும் உணவை தயாரிப்பதுதான் ஒரு சமையல் கலைஞரின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்” என்று தனது பேரன் டானுக்கு அவரது பாட்டி அறிவுரை சொல்லியிருக்கிறார். அந்த அறிவுரையை தீவிரமாக கடைபிடிக்கும் டானுக்கு இப்போது சொந்தமாக 6 ஓட்டல்கள் இருகின்றன.
தாய்லாந்தின் விளையும் மூலப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்தி உணவுகளை சமைக்கும் அவர், அதற்காக தாய்லாந்து விவசாயிகளை அடிக்கடி சந்தித்து, தனக்கு எந்த மாதிரியான காய்கறிகள் தேவை என்பதைச் சொல்லி, அதற்கு ஏற்றவாறு உற்பத்தி செய்ய வைக்கிறார்.