தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்கவர் பாடகர் மனோ. எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அடுத்த இடத்தில், அதிக பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பவர் மனோ. அவரது மகன்கள் ரஃபி, ஜாகீர் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு சிறுவர்களை தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தியதாக காவல்துறையினர் தேடி வருகிறார்கள். என்னதான் நடந்தது என்பதை விசாரித்தபோது அதர வைக்கிறது. அவர்கள் மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் அளவுக்கு விவகாரம் சீரியஸாக மாறியிருக்கிறது. என்னதான் நடந்தது பார்க்கலாம்…
சென்னை மதுரவாயிலை அடுத்த ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரை சேர்ந்த கிருபாகரன் என்பவர் 16 வயது சிறுவன் உடன் வளசரவாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். ஏகேஆர் நகரில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானம் அருகே சென்றபோது, அதே பகுதியில் பாடகர் மனோவின் மகனான ரபிக் உள்பட நான்கு பேர், கிருபாகரனை சுற்றிவளைத்துள்ளனர். கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் தப்பியோடிய மனோ மகன்கள் உட்பட ஐந்து பேரையும் தனிப்படை அமைத்துத் தேடி வருகிறார்கள்.
சிறுவர்கள் இருவரையும் தரையில் முழங்காலிட்டு நிற்க வைத்து கட்டையால் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாடகர் மனோ சினிமாவில் அனைத்து தரப்பினரும் விரும்பம் மனிதராகவும். எல்லோருடனும் சகஜமாக சிரித்துப் பேசி பழகும் குணம் உள்ளவராகவும் இருப்பவர். அவரது வாழ்க்கையில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அவரது மகன்கள் நடந்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது.
அவரது குழந்தைகளில் பெண் குழந்தை ஒன்று சிறிய வயதில் வீட்டு காம்பவுண்ட்டிற்குள் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து போனது. இந்த துயரத்திலிருந்து விடுபடவே அவருக்கு பல காலம் ஆனது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதுபோன்றதொரு வழக்கில் மாட்டியிருந்தார் மனோவின் மகன். இது பெரிய வழக்காக பேசப்பட்டு கைது செய்யப்பட்டார். சரியான சாட்சியம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இது போன்ற விவகாரத்தில் இரண்டு மகன்களின் பெயரும் அடிபட்டிருக்கிறது. அவர்களைத் தேடி வரும் போலீஸ் கைது செய்த பிறகுதான் இதன் உண்மை நிலவரம் தெரிய வரும் என்கிறார்கள்.
மனோ சினிமாவில் தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வருகிறார். பாதி நாட்களுக்கு மேலாக வெளிநாடுகளில் கச்சேரிகளில் இருக்கும் அவர் இந்தியா வந்தால் அனைத்து மொழிகளிலும் பாடல் பாடுவதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவார். இந்த நிலையில் தன்னுடைய மகன்களின் வளர்ச்சியிலோ, அவர்களின் அன்றாட பணிகள் அவர்களின் நட்பு வட்டம் என்று எதிலும் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்ததுதான் இதற்கு முதல் காரணமாக கூறுகிறார்கள்.
சினிமாவில் ஸ்டுடியோக்களில் அடிப்படை ஊழியராக இருந்து படிப்படியாக முன்னேறி வந்தவருக்கு, இளையராஜா இசையில் பாடக் கிடைத்த முதல் வாய்ப்பு அவரை திரையுலகின் உச்சத்தில் கொண்டுபோய் உட்கார வைத்தது.
ஆனால் அதே சமயம் பணத்தைத் தேடி ஓடிய வாழ்க்கையில் தனது சொந்த பிள்ளைகளின் வளர்ப்பை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் போனது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.