‘வயநாடு நிலச்சரிவை வென்ற காதல்’ என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரை வாவ் தமிழா இணையதளத்தில் வெளியாகி இருந்தது. நிலச்சரிவில் மொத்த குடும்பத்தையும் இழந்த ஸ்ருதி என்ற பெண்ணை, ஏற்கெனவே அவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை அகதிகள் முகாமில் இருந்து அழைத்துச் சென்றதாக அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.
அதைப் பற்றி விரிவாக எழுதும்போது, “கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலையைச் சேர்ந்தவர் சிவண்ணா. இவர் தனது மனைவி சபிதா, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா மற்றும் குடும்பத்தினருடன் சூரல்மலையில் வசித்து வந்தார். கடந்த ஜூன் 2-ம் தேதி சிவண்ணாவின் மகள் ஸ்ருதிக்கும், ஜென்சன் என்ற வாலிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தனது மகள் ஸ்ருதியின் நிச்சயதார்த்தத்தையே திருமணத்தைப் போன்று பிரம்மாண்டமாக நடத்தியிருக்கிறார் சிவண்ணா. இந்த நிச்சயதார்த்ததுக்கு விருந்தினர்களாக மட்டும் 1,500 பேர் வந்துள்ளனர். வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி இவர்கள் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஸ்ருதியின் ஒட்டுமொத்த குடும்பமும் சிக்கியது. இதில் ஸ்ருதியின் பெற்றோர், சகோதரி மட்டுமின்றி, அங்கு விருந்தினர்களாக வந்திருந்த அவரது மாமா குடும்பத்தினரும் மண்ணுக்குள் புதைந்தனர். மீட்புப் பணிகளின்போது ஸ்ருதி மட்டும் மீட்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். ஸ்ருதியின் தாயார் சபிதாவின் நிலை என்ன என்பது இதுவரை தெரியாமல் இருக்கிறது.
வயநாடு நிலச்சரிவில் ஸ்ருதி குடும்பம் சிக்கியதைக் கேள்விப்பட்ட ஜென்சன், உடனடியாக சூரல்மலைக்கு வந்துள்ளார். இந்த நிலச்சரிவில் ஸ்ருதியைத் தவிர, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற அனைவரும் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தாலும், தனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை விட்டுக் கொடுக்க கூடாது என்று ஸ்ருதிக்கு ஆதரவாக ஜென்சன் இருந்துள்ளார்.
சூரல்மலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த முகாமில் ஸ்ருதி தங்கியிருந்த 9 நாட்களும், முகாமுக்கு வெளியே தனது காரை பார்க் செய்து அதிலேயே வசித்திருக்கிறார் ஜென்சன். நிலச்சரிவில் காயமடைந்த ஸ்ருதி குணமான நிலையில், அவரது உறவினர்களின் உடல்களை அடக்கம் செய்துவிட்டு, ஸ்ருதியை தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார் ஜென்சன்.
தங்கள் திருமணத்தை டிசம்பர் 26-ம் தேதி நடத்த பெற்றோர் நிச்சயித்திருந்த நிலையில், ஸ்ருதியின் தனிமையை கருதி செப்டம்பர் மாதமே திருமணத்தை நடத்தப் போவதாகவும் ஜென்சன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சூரல்மலை முகாமில் இருந்தவர்கள் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி உள்ளனர்” என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் நடந்து சுமார் 3 வாரங்கள் ஆன நிலையில் ஸ்ருதியின் வாழ்க்கையில் மீண்டும் புயல் வீசியுள்ளது. ஜென்சனும் ஸ்ருதியும் நேற்று ஒரு வேனில் சென்றுகொண்டு இருந்தபோது, அந்த வேன் மீது ஒரு தனியார் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஜென்சனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வேனில் இருந்த ஸ்ருதி உள்ளிட்ட 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், ஜென்சன் மட்டும் சுயநினைவின்றி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீண்டு வர வேண்டும் என்ற பிராத்தனையில் ஸ்ருதி இருக்கிறார்.