விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் தி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது உலக அளவிலான விஜய் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களுக்குப் பிறகு விஜய் திரைப்படம் தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் வசூலையும் கொடுக்கும் படமாக மாறியிருக்கிறது. அதுவும் விஜய் அரசியலுக்குப் போவதால் இந்தப்படத்திற்கு கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது. இதற்குப் பிறகு வினோத் இயக்க இருக்கும் அரசியல் பின்னணி கொண்ட திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
கேரளாவில் அதிக திரையரங்குகளில் கோட் திரையிடப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் நடிகரின் படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது ரஜினி படத்திற்குப் பிறகு விஜய்க்குத்தான் அந்த பெருமை கிடைத்திருக்கிறது.
இந்த திரைப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததது. அதைதொடர்ந்து, இரண்டாவது நாளில் இந்தியாவில் சுமார் 25 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வசூல் குறைந்தது. இருப்பினும், பொது விடுமுறையான கடந்த இரண்டு நாட்களிலும் தி கோட் படத்தின் வசூல் மீண்டும் அதிகரித்தது. இதனால், முதல் நான்கு நாட்களிலேயே தி கோட் படத்தின் உள்நாட்டு வசூல், சுமார் ரூ.150 கோடியை நெருங்கியுள்ளது. ஐந்தாயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் வசூலில் மிரட்டி வருகிறது. உலக அளவில் இந்த படம் 213 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. லண்டன் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக கோட் ஓடிக்கொண்டிருக்கிறது விஜய்க்கு மட்டுமல்லாமல் சில தியேட்டர்களில் விஜய் மனைவி சங்கீதாவுக்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது கவனிக்க வைத்திருக்கிறது.
இப்படி பெரிய வசூல் செய்யும் படங்களின் ஹீரோவாக இருக்கும் விஜய், இந்த லாபத்தை விட்டு அரசியலுக்குப் போவது என்பது தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தருகளுக்கும் கவலை அளித்திருக்கிறது, ரஜினி திரைப்படங்களுக்குப் பிறகு ஒரு தியேட்டரில் கேண்டீன், வாகன நிறுத்தம் வரை அனைத்தும் நிறைந்து வசூல் செய்வது விஜய் படங்கள்தான். அப்படியிருக்கும் ஹீரோ இடத்தில் இனி யார் இருப்பார்கள் என்று கேட்கிறார்கள்.
கோட படத்தில் ஒரு காட்சியில் விஜய் நான் வேறு வேலைக்கு செல்கிறேன் அதுவரைக்கும் நீ பார்த்துக் கொள் என்று சிவகார்த்திகேயனிடம் பொறுப்பை ஒப்படைப்பது போல காட்சி வரும். அது இனிமேல் சினிமாவில் தன்னைப் போல் வசூல் செய்யும் இடத்தில் சிவகார்த்திகேயன் தான் இருப்பார் என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது.
விஜய் இடத்தில் சிவ கார்த்திகேயன் வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பதே உண்மை. அவர் கதைகளையே இன்னும் சரியாக தேர்ந்தெடுக்காத நிலையில் அவர் அவ்வலவு எளிதாக மக்கள் மனதில் இடம் பிடிக்க வாய்ப்பில்லை. அதோடு வசூல் எண்ணிக்கையில் விஜய் இடத்திற்கு சிவா வரமுடியுமா என்பதை இனி வரும் காலத்தில்தான் முடிவு செய்ய இயலும். அதுவரைக்கும் சிவ கார்த்திகேயன் திரைப்படங்கள் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினாலே போதும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.