தமிழ் சினிமாவில் ராசியான ஜோடி என்று எல்லோராம் பார்க்கப்பட்டவர்கள் ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியினர். இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளனர்.
காதல் திருமணத்திற்கு பலத்த எதிர்ப்பு இருந்தாலும் இரு வீட்டாரும் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒரு மகனை தனது திரைப்படத்திலேயே நடிக்க வைத்தார் ரவி. தனது காதல் மனைவி ஆர்த்திகாகவே அடையாறு பகுதியில் கண்ணாடி மாளிகை ஒன்றை கட்டினார் ரவி. முழுக்க ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த வீடு பிரமாண்டமாக இருந்தது. இருந்தாலும் குழந்தைகள் பிறந்த பிறகு இருவருக்கும் கருத்து மோதல்கள் வந்து கொண்டிருந்தது.
கடந்த சில மாதங்களாகவே ரவிக்கும் ஆர்த்திகும் இருந்த கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று தகவல் பரவியது. ஆனால் வீட்டில் பெரியவர்கள் உட்கார்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள் இருவருக்கும் சமாதனம் ஏற்பட சில சில மாதங்கள் பிரிந்து சந்திப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இதன் மூலம் இருவருக்குள்ளும் ஒரு ஈர்ப்பு ஏற்படும் என்று நினைத்தார்கள். ஆனால் பிரிந்து வாழ வேண்டும் என்பதிலிருந்து இருவரும் மாறவேயில்லை. தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது பெரியவர்களுக்கு வருத்தமே.
இதன் பிறகுதான் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக தனது மனைவி ஆர்த்தியுடனான அதிகாரப்பூர்வமான தனது பிரிவை அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.
நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.