வேதியியலில் நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கி ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற நூல் ‘Why We Die’ (நாம் ஏன் செத்துப் போகிறோம்). நூலிலிருந்து ஒரு சாம்பிள்…
‘சமீபத்தில் இந்தியாவுக்குப் போயிருந்தபோது, அங்கு கிராமப்புறங்களில், காடுகளில் வசிக்கும் பழங்குடியினருடன் பணிபுரியும் மொழியியலாளர் கணேஷ் தேவியைச் சந்தித்தேன்.
‘இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றில் பல வெவ்வேறு வகையான மரணத்தை எதிர்கொள்கின்றன. அவற்றில் சில இப்போது ஒரு சிலரால் மட்டுமே பேசப்படுகின்றன. அவை விரைவில் அழிந்துவிடும்’ என வருத்தப்பட்டார்.
மேலும், ‘தனக்கு மரண பயமே இல்லை’ என்றும் சொன்னார். ஒருமுறை ஒரு களப்பயணத்தில் மிகவும் கொடிய விஷப் பாம்பினால் கடிக்கப்பட்டதாகவும் மரணத்தை நினைத்து பயமோ பீதியோ தனக்கு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏன் என்று கேட்டேன்.
நமது உடலில் உள்ள உயிரணுக்களும் திசுக்களும் உறுப்புகளும் சேர்ந்து நாம் என ஆகியிருப்பது போலவே குடும்பம், சமூகம் போன்ற பெரிய நிறுவனங்களின் அங்கமாக நமது தனிப்பட்ட சுயத்தை நாம் கருத வேண்டும் என்று கணேஷ் தேவி கூறினார். ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான நமது செல்கள் இறக்கின்றன. அவற்றின் மறைவுக்கு நாம் இரக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அது நமக்குத் தெரியவும் தெரியாது. எனவே, தனிமனிதர்களான நாம் இறந்தாலும், நமது சமூகமும், பூமியில் உள்ள உயிர் வாழ்க்கையும் தொடரும்.
நமது சொந்த மரபணுக்கள் நம் சந்ததியினர் அல்லது பிற குடும்ப உறுப்பினர்கள் மூலம் வாழும். தனிநபர்களான நாம் வரவும் போகவும் செய்யும்போது வாழ்க்கையானது இன்னும் பல பில்லியன் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்” என்றார்.
இருந்தபோதிலும், பத்து வருடங்கள் கூடுதலாக ஆரோக்கியமாக வாழக்கூடிய மாத்திரையை யாராவது வழங்கினால், அதை யாரும் நிராகரிக்க மாட்டார்கள். நான் வாழ்க்கையைத் தத்துவ நோக்கில் பார்க்கிற முகாமைச் சேர்ந்தவன் தான். ஆனால், வயதாவதைத் தடுப்பதற்கான மருந்துகளைத் தினந்தோறும் எடுத்துக்கொள்கிறேன்’ என்கிறார் வெங்கி ராமகிருஷ்ணன்.