விஜய் நடித்த த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படத்தின் விழா சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. திடீரென்று விழா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முன்னணி நடிகர் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் ஒரு பிரபலத்தின் படத்தின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டால் அதன் பின்னணியில் அழுத்தமான காரணம் இல்லாமல் இருக்க முடியாது.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்தில் அரசியல் நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு திரைப்படமாகத்தான் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்கிறது படக்குழு. ஆனால், விஜய் கட்சியின் கொடி அறிமுகம், மாநாடு நடத்தும் யோசனை என்று பரபரப்பாக இருக்கும் சூழலில் அது சார்ந்த எதிர்வினைகளையும் படக்குழுவினர் சந்தித்துதான் ஆகவேண்டும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் முன்பு படத்தின் முன்னோட்டக் காட்சிகளைத் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெங்கட்பிரபு உட்பட படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு விஜய் வரவில்லை. ஆனாலும் விழாவில் அனைவரும் உற்சாகத்துடன் பேசிய பிறகு பத்திரிகையாளர்களின் கேள்வி நேரத்தின் போது சிலர் ஏடாகூடமான கேள்விகளைக் கேட்டு வெங்கட்பிரவை பதற வைத்தார்கள்.
விஜய் கட்சியின் கொள்கை என்ன அதைப்பற்றி உங்களிடம் சொன்னாரா ? என்றும், உங்கள் வீட்டில் யாராவது விஜய் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ.ஆகும் திட்டம் உள்ளதா என்றெல்லாம் சகட்டுமேனிக்கு வரைமுறை இல்லாமல் கேள்விகளைக் கேட்டனர். ஒரு கட்டத்தில் கோபமடைந்த வெங்கட்பிரபு என் வீட்டில் நடக்கும் விஷயங்களை உங்களுக்கு எதுக்கு சொல்ல வேண்டும் என்றார். சிலர் விஜய் மக்கள் கட்சி என்று குறிப்பிட்டபோது, கட்சி பெயரையே சரியாக சொல்லத்தெரியாதவர்களுக்கு எதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கொந்தளித்தார்.
இதோடு விடாமல் விஜய் ஏன் விழாவிற்கு வரவில்லை என்று கேட்டு சூழலை மேலும் டென்சனாக்கினார்கள். இதையெல்லாம் படக்குழுவினர் விஜய்யின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அதனால் மீண்டும் ஒரு விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவெடுத்திருக்கிறார் விஜய். அது இன்று நடைபெறும் விழாவாக இருந்தது. அதோடு படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடத்தில் வைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி மீடியாக்கள் திரைப்படமில்லாமல் என்னவெல்லாம் கேட்பார்கள் அதை எப்படி எதிர்கொள்வதென்று ஆலோசனை செய்யப்பட்டது. கட்சியின் கொடிதான் தற்போது பிரதானமாக சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதனால் அதுகுறித்த விவரமான தகவல்கள் கொடுத்து எப்படி சமாளிப்பது என்பதும் பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டுக்கு முன்பு இதுபற்றிய விபரங்களை சொல்வதில் விஜய்க்கு உடன்பாடில்லை என்பதால் அதுவும் தவிர்க்கப்பட்டது.
வழக்கமாக ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரமாண்ட,மான விழாவை நடத்தி அவர்களுக்கு தனியாக குட்டிக் கதையும் சொல்ல வேண்டியிருக்கும் என்று யோசித்த விஜய் இந்த விழாவை தற்போதைக்கு ஒத்தி வைத்திருப்பதாக தெரிகிறது.
இரண்டு விழாக்களோடு அடுத்து வர இருக்கும் கட்சியின் முதல் மாநாடு வேறு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தையும் ஏற்படுத்தலாம் என்று சிலர் சொன்ன தகவல்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
அரசியல் என்றால் சும்மாவா ?