பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சனுக்கு இப்போது வயது 81. ஆனால் இந்த வயதிலும் இவர்தான் இந்திய சினிமாவின் நிரந்தர நாயகனாக இருக்கிறார்.
இந்திய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், ‘மூட் ஆஃப் தி நேஷன்’ என்ற தலைப்பில் இந்தியா டுடே நாளிதழ் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. நாட்டு மக்களுக்கு பிடித்த தலைவர், நடிகர் நடிகைகள், விளையாட்டு வீர்ர்கள் என பல பிரிவுகளில் மக்களின் கருத்துகளை இதில் கேட்டறிந்துள்ளார்கள். நாடு முழுவதும் 40,591 பேரைச் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தி முடித்துள்ளது இந்தியா டுடே.
இந்த கருத்துக் கணிப்பில் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த நம்பர் 1 சினிமா நடிகராக அமிதாப் பச்சன் இருக்கிறார். தங்களுக்கு பிடித்த ஹீரோ என்று 26 சதவீதம் பேர் அவரது பெயரைத்தான் சொல்லி இருக்கிறார்கள். அமிதாப் பச்சனுக்கு அடுத்த இடத்தில் ஷாருக்கான் இருக்கிறார். அவரது பெயரை 24.5 சதவீதம் பேர் முன்மொழிந்துள்ளனர். இந்த வரிசையில் சல்மான் கான் 3-வது இடத்திலும் (7.9 சதவீதம்), அக்ஷய் குமார் 4-வது இடத்திலும் (7.7 சதவீதம்) உள்ளனர். தென்னிந்திய நடிகர்களில் அல்லு அர்ஜுன் மட்டுமே இந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார். 5-வது இடத்தைப் பிடித்துள்ள இவரை தங்களுக்கு பிடித்த ஹீரோவாக 6 சதவீதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். திரையுலகில் அமிதாப் முதல் இடத்தில் இருந்தாலும் ஓடிடி ரசிகர்களின் நம்பர் 1 ஹீரோவாக பங்கஜ் திரிபாதி இருக்கிறார்.
தீபிகா படுகோனுக்கு முதல் இடம்
கதாநாயகிகளைப் பொறுத்தவரை தீபிகா படுகோன் 24.7 சதவீத ஆதரவைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் காத்ரினா கைப் (10.3), ஆலியா பட் (9.4) ஆகியோர் உள்ளனர். புஷ்பா படத்தின் மூலம் வட மாநிலங்களிலும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா 7 சதவீதம் பேரின் ஆதரவைப் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறார். பாலிவுட் நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, இந்த வரிசையில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஓடிடியைப் பொறுத்தவரை சுஷ்மிதா சென் நம்பர் 1 ஹீரோயினாக இருக்கிறார்.
முதலிடத்தில் நீடிக்கும் கோலி
இந்தியாவின் நம்பர் 1 கிரிக்கெட் வீர்ர் யார் என்ற கேள்விக்கு விராட் கோலி என்று 39.3 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். கடந்த ஆண்டிலும் அவர் 41.4 சதவீதம் பேரின் ஆதரவைப் பெற்று முதல் இடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்த இடத்தை மகேந்திர சிங் தோனி பெறுகிறார். அவருக்கு 29.6 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 11.9 சதவீதம் பேரின் ஆதரவுடன் ரோஹித் ச்சர்மா 3-வது இடத்தில் இருக்கிறார். இந்த வரிசையில் 4-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் (3.3 சதவீதம்), 5-வது இடத்தில் ஹர்த்திக் பாண்டியாவும் உள்ளனர். கிரிக்கெட் வீராங்கனைகள் வரிசையில் முதல் இடத்தை ஸ்ருமிதி மந்தனா பிடித்துள்ளார். அடுத்த இடங்களில் ஹர்மன்பிரீத் கவுர், ஷெஃபாலி வர்மா, மிதாலி ராஜ், தீப்தி சர்மா ஆகியோர் உள்ளனர்.
சோப்ராவுக்கு பெருகும் ஆதரவு
கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளில் பிடித்த வீர்ர் யார் என்ற கேள்விக்கு, நீரஜ் சோப்ராவின் பெயரையே பலரும் சொல்லி இருக்கிறார்கள். இந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிவதில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை 41.5 சதவீதம் பேருக்கு பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் இவருக்கான ஆதரவு 36.2 சதவீதமாக இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆதரவு கூடியிருக்கிறது. அவருக்கு அடுத்ததாக சமீபத்தில் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற சுனில் சேட்ரியை குறிப்பிட்டுள்ளார்கள். அவருக்கு ஆதரவாக 13.4 சதவீதம் பேர் கருத்து கூறி இருக்கிறார்கள். இந்த வரிசையில் அடுத்த 3 இடங்களை ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், பாட்மிண்டன் வீர்ர் லக்ஷயா சென் ஆகியோர் பிடித்திருக்கிறார்கள்.
சிந்துவுக்கு நீடிக்கும் ஆதரவு
கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளில் ரசிகர்களைக் கவர்ந்த வீராங்கனையாக பி,வி.சிந்து நீடிக்கிறார். அவருக்கு 28.2 சதவீதம் பேரின் ஆதரவு இருக்கிறது. ஒலிம்பிக்கில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாகர் 12.3 சதவீதம் பேருக்கு பிடித்த வீராங்கனையாக இருக்கிறார். ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருந்த்தால் பதக்கத்தை இழந்த வினேஷ் போகட்டுக்கு இந்த வரிசையில் 3-வது இடம் கிடைத்துள்ளது. 4-வது இடத்தை அன்ஷு மாலிக்கும், 5-வது இட்த்தை ஹாக்கி வீராங்கனை சவிதா பூனியாவும் பிடித்துள்ளனர்.