No menu items!

அமெரிக்காவில் 17 நாட்கள் – முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார்?

அமெரிக்காவில் 17 நாட்கள் – முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார்?

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டில் அவர் 17 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய், சிங்கப்பூர், அபுதாபி, ஜப்பான், ஸ்பெயின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து இன்றிரவு புறப்பட்டு, நாளை அமெரிக்கா சென்றடையும் முதல்வர் ஸ்டாலின், 29-ந் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் ‘இன்வெஸ்டர் கான்கிளேவ்’ என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வரும்படி உலக பெரும் நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுக்கவுள்ளார்.

31-ந் தேதி புலம் பெயர் தமிழர்களை முதல்வர் சந்தித்து பேசுகிறார். பின்னர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கிருந்தபடி அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை அவர் நேரில் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்க உள்ளார்.

சர்வதேச அளவில் சிறப்பாக இயங்கி வரும் பார்ச்சூன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை முதல்வர் சந்தித்து பேசுவார். வரும் 7-ம் தேதி சிகாகோவில் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் மற்றும் அமெரிக்காவின் தமிழ்ச்சங்கங்கள் இணைந்து நடத்தும், ‘வணக்கம் அமெரிக்கா’ என்ற சிறப்பு நிகழ்ச்சியான மாபெரும் கலாசார விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி சிகாகோ ரிவர் ரோட்டில் உள்ள ரோஸ்மான்ட் அரங்கத்தில் நடைபெறுகிறது.

தமிழகத்துக்கும், வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கும் இடையேயுள்ள உறவுகளை வெளிப்படுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே அமெரிக்கா சென்றுள்ள தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் 17 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் 12-ந் தேதி முதல்-அமைச்சர் சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சரின் இந்த பயணம் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தங்கம் தென்னரசு ஆகியோரும் பயணம் மேற்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...