சூதாட்டம் மற்றும் மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு விசாரணை செய்துவரும் நிலையில், குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பேஸ்புக், யூடியூப், வாட்ஸ்ஆப், இன்ஸ்டகிராம், வீ-சாட் போன்ற சமூக வலைதளங்களுக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற செயலியாக டெலிகிராம் உள்ளது. ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பாவெல் துரோவ் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு இந்த செயலியை உருவாக்கினார். இந்த செயலியை 90 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் டெலிகிராம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உக்ரைனில் ரஷ்யாவின் போர் குறித்த தகவல்களுக்கான முக்கிய ஆதாரமாகவும் மாறியுள்ளது. சிலர் இந்த டெலிகிராம் அப்ளிகேஷனை “போருக்கான ஒரு விர்ச்சுவல் போர்க்களம்” என்று அழைக்கின்றனர். ஃபோர்ப்ஸ் நிறுவன அறிக்கையின்படி டெலிகிராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான துரோவின் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் டெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடை பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இணையவழி குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த குற்ரச்சாட்டுகளை தொடர்ந்து 39 வயதான பாவெல் துரோவ், பணமோசடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆபாசப் பதிவுகள் டெலிகிராம் செயலி மூலம் பகிரப்படுவதற்கு ஆதரவாக இருந்ததாக, பிரான்ஸ் அரசால் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அந்நாட்டு அரசு பிறப்பித்த கைது வாரன்ட்டின் பேரிலேயே, கடந்த சனிக்கிழமையன்று அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 90 கோடி பயனாளர்களைக் கொண்ட டெலிகிராமின் சிஇஓ கைது செய்யப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் டெலிகிராம் சார்ந்து பெறப்பட்டுள்ள புகார்கள் என்ன? நிலுவையில் உள்ள அந்த புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து உள்துறை அமைச்சகத்தை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 2020 முதல் இந்திய தேச பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சீன தேச மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. டிக்-டாக் தொடங்கி பல்வேறு செயலிகளுக்கு அப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சீன தேசத்துடன் தொடர்பு கொண்ட மற்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் தற்போது டெலிகிராம் செயலியும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது.