அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், “மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு, அவர் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இது அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் விஷயம். முதல்வர் பதவியை கட்டிக் காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், அதனை சாதாரணமாக கையாள்கிறார் ஸ்டாலின்.
பள்ளியில் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். இங்கே ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் அவர். அந்த வகையில் ஸ்டாலினுக்கு எனது ஹாட்ஸ் ஆஃப்” என்றார்.
ரஜினிகாந்தின் இந்த பேச்சை முதல்வர் ஸ்டாலின் ரசித்தாலும் துரைமுருகன் ரசிக்கவில்லை. இது தொடர்பாக துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ” சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசி காலத்திலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்” என்றார் அமைச்சர் திரைமுருகன். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் பேச்சை துரைமுருகன் கண்டித்தாலும், அதை பாராட்டி திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி செய்தி வெளியிட்டது.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதைப்பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக கட்சியில் சேருவதற்கும் பொறுப்புகளுக்கு வருவதற்கும் ஏராளமான இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர். நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். நேற்றைய நிழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும்போது எதற்கு அதிக கைத்தட்டல் எழுந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நான் அதைச் சொன்னால் மனதில் வைத்துக் கொண்டு பேசிகிறார் என்று நினைத்துக் கொள்வீர்கள்.” என்றார். அவரது இந்த பேச்சு ரஜினியின் கருத்தை ஆமோதிப்பதுபோல் இருந்தது.
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், “அமைச்சர் துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர்: அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். துரைமுருகன் உடனான எனது நட்பு எப்போதும் போல தொடரும்” என்றார்.