பாலிவுட்டில் நடிகர்கள் தங்கள் பயணங்களுக்கு பொதுவாக விலையுர்ந்த கார்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கார்களில் யார் விலையுர்ந்த புதிய மாடல் கார்களை வாங்குவது என்பது ஒரு போட்டியாகவே இருக்கிறது. அதில் முதல் இடத்தில் இருப்பது அக்ஷய் குமார், ஷாருக்கான், சல்மான் மூவரும்தான். ஷாருக்கானிடம் அதிக வசதிகளையும், தொழில்நுட்பத்திலும் முதல் தரமான கேரவேன் இருக்கிறது. இதைத்தான் அவர் படப்பிடிப்புகளுக்குப் போகும்போது பயன்படுத்துவார். கிட்டதட்ட வீட்டில் என்ன வசதிகள் இருக்குமோ அது அனைத்தும் இந்த வேனில் இருக்கும். இன்னும் டப்பிங் செய்ய வேண்டிய படங்களை முடித்துக் கொடுக்க இந்த வேனில் மினி டப்பிங் தியேட்டரும் இருக்கிறது.
அக்ஷய் குமார் தன்னுடைய காரிலேயே அனைத்து வசதிகளையும் வைத்திருப்பார். நடிகைகளில் பிரியங்கா சோப்ரா இந்தியாவிற்கு வரும்போது பயன்படுத்த காஸ்ட்லி காரை வாங்கி வைத்திருக்கிறார். கத்ரினா கைப் தங்களுக்கு சொந்தமாக பிரமாண்டமான கேரவேன் இல்லாமல் எங்கும் செல்வதில்லை. சோனு சூட் தனது கேரவேனில் அடிப்படை வசதிகளோடு மினி சைஸ் திரையரங்கத்தை வைத்திருக்கிறார்.
இது இல்லாமல் இவர்கள் அனைவருக்கும் சொந்தமாக விமானமும் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியமான தகவல்.
இப்படி சொந்தமாக விமானம் வாங்கும் கலாச்சாரம் இப்போது தமிழ் சினிமாவுக்கும் வந்திருக்கிறது. முதலில் விமானம் வாங்கியவர் நடிகை நயன் தாரா. இதன் மூலம்தான் அடிக்கடி அவர் இந்தியாவிற்குள் பல இடங்களுக்கு சென்று வருகிறார். பெங்களூரு கொச்சி விமான நிலையங்களில் விமானத்தை நிறுத்த அனுமதியும் பெற்றிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனுடன் விமானத்தின் அருகில் நின்று எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார்.
ஏற்கனவே ரஜினிகாந்திற்கு சொந்தமாக ஒரு ஜெட் விமானம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த விமானத்தை ரொம்பவும் அரிதாகவே அவர் பயன்படுத்துகிறார். இதே போல நடிகர் விஜய்க்கும் சொந்தமாக விமானம் உள்ளது. இதனை அவர் அதிகம் பயன்படுத்தியது கிடையாது. முக்கிய விருந்தினர்களுக்கு வாடகைக்கு அது பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் சூர்யா தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். டசால்ட் பெல்கான் என்கிற அந்த பிரைவேட் ஜெட்டின் விலை ரூ.120 கோடி இருக்குமாம். இந்த தனி விமானத்தில் நவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும் அதிகளவில் உள்ளதாம். இவர் ஏற்கனவே மும்பை விமான நிலையத்தில் இருக்கும் வாகன நிறுத்தும் இடங்களின் உரிமையை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி வைத்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல லட்சம் வாகனங்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் மட்டுமே பல கோடிகள் வந்து கொட்டுகின்றனவாம். அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதை ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார்.