No menu items!

அண்ணா மீது ஆணையாக உரிமையை விட்டுத்தர மாட்டோம் – எடப்பாடி புகாருக்கு முதல்வர் பதில்!

அண்ணா மீது ஆணையாக உரிமையை விட்டுத்தர மாட்டோம் – எடப்பாடி புகாருக்கு முதல்வர் பதில்!

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் நினைவாக நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று நாணயத்தை வெளியிட்டார். தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட்டு பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “கலைஞர் கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் மிகவும் தீவிரமானவை… துணிச்சல் மிக்கவை. இந்தியாவின் தேசிய ஆளுமை கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்து பலதரப்பட்டவர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், பண்பாட்டுத் தலைவர். சமூக நீதியை அயராது பரப்பியவர் கலைஞர் கருணாநிதி. அவரது பொதுநலத் தொண்டால், நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் நாணயத்தை நான் வெளியிடுவது, அவருடைய அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கு நான் செலுத்தும் அஞ்சலி” என்றார். நாணய வெளியீட்டு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியும் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.

இந்த நிகழ்ச்ச்சியைப் பற்றி கருத்து தெரிவித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  “ஆகஸ்ட்15-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் நாங்கள் கலந்து கொள்கிறோம், நீங்களும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சொன்ன உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருப்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கரின் இல்லத் திருமண விழாவில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. கலைஞரின் நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்று, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரில் சென்று பார்வையிட்டார். திமுககாரர் பேசுவதை விட, சிறப்பாக நேற்று ராஜ்நாத் சிங் கலைஞர் குறித்து பேசினார். உள்ளத்தில் இருந்து உண்மையைப் பேசினார் ராஜ்நாத் சிங்.

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரைப் பற்றி பேசியதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கலைஞர் நாணயம் வெளியிடுகிறார்கள் அதில் இந்தி இடம் பெற்றுள்ளது. `தமிழ், தமிழ்’ என திமுகவினர் முழங்குகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் நாட்டு நடப்பு பற்றி புரிந்திருக்க வேண்டும் அல்லது மூளையாவது இருக்க வேண்டும். மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்ததால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.

அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடும்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும், அண்ணா, கலைஞர் பெயரிலான நாணயத்தில் மட்டும்தான் தமிழ் இடம் பெற்றுள்ளது, கலைஞர் பெயரிலான நாணயத்தில் `தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதைக் கூட புரிந்து கொள்ள முடியாத எதிர்கட்சித் தலைவர் தான் நமக்கு கிடைத்திருக்கிறார். ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி அல்ல, இது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள் அவருக்காக ஓர் இரங்கல் கூட்டமாவது நடத்தி இருக்கிறார்களா? ஓர் இரங்கல் கூட்டத்தை கூட நடத்துவதற்கு யோக்கியதையற்றவர்கள் கலைஞருடைய விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?. ராஜ்நாத் சிங்கை அழைத்து நாம் நிகழ்ச்சி நடத்தியதால் திமுக, பாஜகவுடன் உறவு வைத்திருக்கிறது என்ற ஒரு செய்தியை கிளப்பி இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் எந்தவிதமான ரகசிய உறவும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.

எடப்பாடி பழனிச்சாமியை போல உருண்டு போய், பதுங்கி போய் பதவி வாங்க வேண்டிய தேவை திமுகவுக்கு கிடையாது, எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுப்போம், அதேவேளையில் அண்ணாவின் மீது ஆணையாக சொல்கிறேன். நமக்கென்று இருக்கின்ற உரிமையை ஒரு நாளும் விட்டுத்தர மாட்டோம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...